உண்ணி காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; செல்லப்பிராணி வளர்ப்போர் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு

மேட்டுப்பாளையம்,ஜன.4: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ‘ஸ்க்ரப் டைபஸ்” எனும் உண்ணி காய்ச்சல் நோய் பரவல் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர்,புதர்கள் மண்டிய பகுதிகளில் வசிப்போர்,விவசாய வேலையில் ஈடுபடுவோர் இந்த உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமுள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம், காரமடை,சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காரமடை வட்டார மருத்துவர் சுதாகர்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் குழுவினர் பொதுமக்களுக்கு உண்ணி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:உண்ணி காய்ச்சலானது எலி,அணில், பெருச்சாளி, செல்லப்பிராணிகளான நாய்,பூனை, வீட்டில் வளர்க்கப்படும் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உடலில் வளரும் உண்ணி பூச்சிகள் அல்லது மண்ணில் உள்ள உண்ணி பூச்சிகள் கடிப்பதன் மூலம் பரவும் தன்மை கொண்டது.

செல்லப்பிராணிகளை வளர்ப்போர், மண்ணில் அதிக நேரம் வேலை செய்பவர்கள்,விவசாய பணி செய்பவர்கள்,புதர் மண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. நோய் ஏற்பட்டால் காது மடல்,அக்குள் உள்ளிட்ட உடலின் மறைவான பகுதிகளில் தடிப்புகள், கொப்புளங்கள் அல்லது சொறி ஏற்படும்.

அதனை தொடர்ந்து காய்ச்சல்,தலைவலி,உடல் சோர்வு உள்ளிட்டவை ஏற்படும்.இந்த அறிகுறிகளை கண்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இதற்காக ரத்த பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த காய்ச்சலை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் மாத்திரை,மருந்துகள் மூலமாக நோயை உடனடியாக குணப்படுத்த இயலும்.நோய் பாதிப்பு தீவிரமடைந்தால் உடலின் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.இந்த காய்ச்சல் வராமல் தடுக்க சுய சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.வீட்டைச் சுற்றிலும் புதர்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

விவசாய நிலங்களில் பணி முடித்து விட்டு திரும்பிய பின்னர் சுடுதண்ணீரில் குளியல் சோப்பினை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.வீட்டில் உள்ள விரிசல் மற்றும் பிளவுகளை அடைத்தல் வேண்டும்.
திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்த்து வீடுகளில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post உண்ணி காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; செல்லப்பிராணி வளர்ப்போர் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: