கரும்பு விவசாயிகள், டிரைவர்கள் சாலை மறியல் முயற்சி டிஎஸ்பி பேச்சுவார்த்தை செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே

செய்யாறு, ஜன.3: செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே டிரைவர்கள், கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் சமாதானம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு பருவத்திற்கான கரும்பு அரவை பணி கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. ஆனால் அரவை தொடங்கிய சில மணி நேரத்திலேயே மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் ஆலையில் இருந்த மெஷினில் திடீரென பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கரும்புகள் அரவை செய்யப்படவில்லை. எனவே, கரும்புகளுடன் வாகனங்கள் ஆலை வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறது. கரும்புகளும் காய்ந்து வருகிறது. அரவை தொடங்கி வைத்து 6 நாட்களாகியும் ஆலை இயங்காமலும், கரும்புகள் அரவை செய்யப்படாமலும் இருந்ததை கண்ட விவசாயிகள், லாரி, டிராக்டர் டிரைவர்கள் ஆலை நிர்வாகத்திடம் கேட்டு வந்தனர்.

மேலும், வாகன டிரைவர்களும், தாங்கள் இங்கேயே காத்திருப்பதால் தினப்படி மற்றும் உணவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆலை நிர்வாகம் முறையான பதில் அளிக்காமல் தினமும் பல்வேறு காரணங்களை கூறி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலையும் ஆலையில் கரும்பு அரவை தொடங்காததால் ஆத்திரம் அடைந்த 50க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் செய்யாறு- வந்தவாசி சாலையில் அனப்பத்தூர் கூட்ரோட்டில் சர்க்கரை ஆலை எதிரே திடீரென மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி சண்முகவேலன், இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் அனக்காவூர் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, லாரி டிரைவர்களுக்கு உணவுப்படி மட்டும் வாங்கித் தருவதாக தெரிவித்தனர். பின்னர், கரும்பு அரவை குறித்து அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். அதனை ஏற்று டிரைவர்கள், விவசாயிகள் மறியல் முயற்சியை கைவிட்டனர். இந்த சம்பவம் காரணமாக அந்த சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆலை நிர்வாகத்திடம் போலீசார் கேட்டபோது, ஆலை டிரான்ஸ்பார்மர், மெஷினில் ஏற்பட்ட பழுது இன்ஜினியர் மூலம் சீரமைக்கப்பட்டு இன்று (நேற்று) முதல் அரவை தொடங்கி பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

The post கரும்பு விவசாயிகள், டிரைவர்கள் சாலை மறியல் முயற்சி டிஎஸ்பி பேச்சுவார்த்தை செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே appeared first on Dinakaran.

Related Stories: