தண்டராம்பட்டு, ஜன.3: சாத்தனூர் அணையில் இருந்து, பாசன தேவைக்காக பிப்ரவரி முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 118.15 அடியாக உயர்ந்து உள்ளது. இந்நிலையில், அணையில் இருந்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் உதவி பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. உதவி செயற்பொறியாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் சுகந்தி, உதவி பொறியாளர் சந்தோஷ், ராஜேஷ், செல்வ பிரியன், முன்னாள் திட்ட குழு தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், புயல் மழை காரணமாக அனைத்து ஏரிகளும் முழு கொள்ளளவு எட்டி உள்ளது. ஆகையால், பாசனத்துக்காக பிப்ரவரி முதல் வாரத்தில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஏரிகளுக்கு நீர் செல்லக்கூடிய கால்வாய்களை 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை வைத்து தூர்வார வேண்டும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் கலெக்டர் ஒப்புதல் பெற்று அனைத்து ஏரிகளுக்கும் செல்லக்கூடிய கால்வாய்களை தூர்வார வேண்டும். பாசன சங்க தலைவர்கள் கூட்டம் நடத்த வேண்டும். அவர்களிடம் கருத்துக்களை கேட்டு பணிகளை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். பாசன சங்க தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார்.
The post சாத்தனூர் அணையில் பிப். முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பு ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் விவசாய பாசன தேவைக்காக appeared first on Dinakaran.