நிவாரணம் வழங்க கோரி சடலத்துடன் உறவினர்கள் மறியல் 18 பேர் கைது துரிஞ்சாபுரம் அருகே பரபரப்பு

கலசபாக்கம், டிச. 28: துரிஞ்சாபுரம் ஒன்றியம் கொளக்கரவாடி ஊராட்சி ஈச்சங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(40) விவசாயி. இவர் நேற்று காலை இவரது விவசாய நிலத்தில் பூ பறிக்க சென்றபோது நிலத்தில் மழையால் அறுந்து விழுந்திருந்த மின்கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். மேலும் ஏற்கனவே தாழ்வான நிலையில் உள்ள மின் கம்பியை மாற்றி தர வேண்டுமென மல்லவாடி மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தாழ்வான நிலையில் இருந்த மின்கம்பியை மாற்றாததால் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி இருந்ததாக கூறி விநாயகமூர்த்தியின் உறவினர்கள் நேற்று மல்லவாடி மின்வாரிய அலுவலகம் எதிரே வேலூர் திருவண்ணாமலை செல்லும் சாலையில் சடலத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மின்வாரிய துறை மூலம் குடும்பத்தில் உள்ளவர் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவல் அறிந்த எஸ்பி சுதாகர், ஏ.எஸ்.பி சதீஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசருக்கும் மறியலில் ஈடுபட்டு இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மறியலில் ஈடுபட்டவர்களில் 18 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post நிவாரணம் வழங்க கோரி சடலத்துடன் உறவினர்கள் மறியல் 18 பேர் கைது துரிஞ்சாபுரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: