குப்பையில் விழுந்த 2 பவுன் நகையை மீட்டு ஒப்படைப்பு

ஓசூர், ஜன.1: ஓசூரில் கடையை சுத்தம் செய்தபோது, குப்பையில் விழுந்த 2 பவுன் நகையை கண்டுபிடித்து கொடுத்த துப்புரவு பணியாளர்களுக்கு கண்ணீர் மல்க பேன்சி ஸ்டோர் உரிமையாளர் நன்றி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேடர்பள்ளியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் மாருதி (30). இவர் தினந்ேதாறும் காலையில் கடையை திறந்து சுத்தம் செய்வது வழக்கம்.நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் 2 பவுன் கம்மல் நகை பேப்பரில் சுற்றிவைக்கப்பட்டு இருந்தது, சுத்தம் செய்யும் போது அது குப்பையில் விழுந்துள்ளது. இதை அறியாமல் குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களிடம் வழங்கினார். பின்னர் கடையில் இருப்பு விவரங்களை பார்த்தபோது, 2 பவுன் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். கடை முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

சிறிது நேரம் யோசித்த பின், கடையை சுத்தம் செய்தபோது, பேப்பரில் சுற்றி வைத்தது குப்பையில் விழுந்திருக்கும் என எண்ணியவர், இது பற்றி அப்பகுதி கவுன்சிலர் ரஜினிக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கவுன்சிலர் உடனடியாக துப்புரவு மேற்பாைர்வையாளர் யாசின், மனோஜ்க்கு தகவல் அளித்து, பேடரபள்ளி 3வது வார்டில் தூய்மை பணியில் ஈடுபட்டவர்கள் குறித்து விவரம் கேட்டபோது, அங்கு தேவி (25), அமர் (22) ஆகியோர் பணியாற்றியது தெரியவந்தது.

அவர்களிடம் துப்புரவு மேற்பார்வையாளர் தொடர்பு கொண்டு, தவறுதலாக குப்பையில் 2 பவுன் நகை விழுந்து விட்டது. அவை குப்பை சேகரிக்கும் பெட்டியில் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார். உடனடியாக தூய்மை பணியாளர்கள் தாங்கள் சேகரித்து வந்த குப்பை பெட்டியில் தேடி பார்த்தனர். அப்போது ஒரு காகித்தில் 2 பவுன் கம்மல் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று காலை துப்புரவு மேற்பார்வையாளர் மூலம், மாருதியிடம், தூய்மை பணியாளர்கள் 2 பவுன் கம்மல்களை ஒப்படைத்தனர். நகையை பெற்றுக்கொண்டவர், தூய்மை பணியாளர்கள் தேவி, அமர் ஆகியோருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும் அப்பகுதி கவுன்சிலருக்கும் நன்றி தெரிவித்தார்.

The post குப்பையில் விழுந்த 2 பவுன் நகையை மீட்டு ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: