‘சிஸ்டம் சரியில்லை’ எனக் கூறி எச்1-பி விசா விவகாரத்தில் ஜகா வாங்கிய எலான் மஸ்க்

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சியில் தொழிலதிபர்களான எலான் மஸ்க், இந்திய வம்சாவளிகளான விவேக் ராமசாமி, ராம் கிருஷ்ணன் ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார். இது அமெரிக்கர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, எச்1பி விசா குறித்த விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது.

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த எலான் மஸ்கும் எச்1பி விசா மூலம் அமெரிக்கா வந்து தொழிலதிபர் ஆனவர். இதனால் எச்1பிக்கு அவர் முழு ஆதரவு அளித்து வருகிறார். இதற்கு, அமெரிக்கர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்ப்புகள் வலுக்கும் நிலையில் மஸ்க் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவருக்கு நேற்று பதிலளித்த மஸ்க், ‘‘உலகின் மிகச்சிறந்த திறமையாளர்களின் இலக்காக அமெரிக்கா இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய எச்1பி திட்டம் அதற்கு தீர்வு அல்ல. இது முறையாக செயல்படாத திட்டமாக உள்ளது. இதில் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். குறைந்தபட்ச சம்பளத்தை கணிசமாக உயர்த்தி, எச்1பிக்கு வருடாந்திர கட்டணத்தை நிர்ணயிப்பதன் மூலம் உள்நாட்டை விட வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்துவதை செலவுமிகுந்ததாக ஆக்கி எளிதாக சரி செய்யலாம்’’ என்றார்.

அமெரிக்காவில் உள்நாட்டவர்களை விட இந்தியா போன்ற வெளிநாட்டவர்களை எச்1பி விசா மூலம் பணிக்கு அமர்த்துவது செலவு குறைந்தது என்பதால் பல நிறுவனங்கள் முன்னுரிமை தருகின்றன. இதற்கு வேட்டு வைக்க வேண்டும் என மஸ்க் கூறியிருக்கிறார்.

The post ‘சிஸ்டம் சரியில்லை’ எனக் கூறி எச்1-பி விசா விவகாரத்தில் ஜகா வாங்கிய எலான் மஸ்க் appeared first on Dinakaran.

Related Stories: