வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் உட்பட 3 தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் 27 மணி நேரத்தில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பர்பன் தெருவில் கடந்த 1ம் தேதி அதிகாலை புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் லாரியை ஓட்டி வந்து கூட்டத்தினர் மீது மோதி துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 35 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவரது பெயர் சம்சுதீன் பாகர் ஜாபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. லாரியில் நடத்தப்பட்ட சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் கொடி, ஆயுதங்கள், வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்த சதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் டெக்ஸாஸ் நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் இரண்டாவது தீவிரவாத தாக்குதலாக, லாஸ் வேகாஸ் பகுதியில் அமைந்துள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் ஓட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வெடித்தது. இந்த சம்பவத்தில் சம்சுதீன் பாகர் ஜாபருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. மூன்றாவது தாக்குதல் சம்பவம், நியூயார்க்கின் குயின்ஸ் நகரில் அமைந்துள்ள இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்தனர். நியூயார்க்கில் கிளப்புக்கு வெளியே காத்திருந்த மக்கள் மீது நான்கு பேர் கும்பல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.
மேற்கண்ட மூன்று சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையா? என்பது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. வரும் 20ம் தேதி அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாத தாக்குதல் முயற்சிகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் டிரம்பின் ஆதரவாளரான தொழிலதிபர் எலான் மஸ்க்கையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post டிரம்ப் அதிபராக பதவியேற்பதை சீர்குலைக்க சதி; 27 மணி நேரத்தில் 3 தீவிரவாத தாக்குதல்: புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை appeared first on Dinakaran.