அதாவது அதிநவீன தீங்கிழைக்கும் மென்பொருளை பயன்படுத்தி தாக்குதல் செய்வது, இணைய நிதி மோசடிகளை அரங்கேற்றுவது, கேஒய்சி மோசடி, கிரிப்டோகரன்சி மோசடி, டிஜிட்டல் கைது போன்றவை மிகவும் அதிகமாக நிகழ்கின்றன. சமூகத்தில் நடக்கும் மற்ற குற்றங்களை காட்டிலும் சைபர் கிரைம் குற்றங்கள் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும், முகம் தெரியாத நபர்களிடம் இருந்தும்
ஏற்படுகின்றன. இவர்களால் தனி நபர்கள் மட்டுமின்றி அரசு, வர்த்தக நிறுவனங்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றன.
சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக சட்ட அமலாக்க முகமைகள், வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கி போன்றவை விழிப்புணர்வு தகவல்களை வெளியிடுகின்றன. ஆனால் சைபர் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் வங்கி, கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்பாடு, பணம் செலுத்துதல் ஆகியவற்றால் ஏற்படும் நிதி இணைய மோசடிகள் மற்றும் பண இழப்புகளை விரைவாகப் புகாரளிக்க உதவுகிறது. மற்ற அவசரகால எண் 108, 112 போன்று சைபர் ஹெல்ப்லைன் எண் 1930யின் பயன்பாடும் மக்களை வேகமாக சென்றடைந்து வருகிறது. எந்த நேரமும் புகார்களை தெரிவிக்க www.cybercrime.gov.in என்ற இணையதளம் செயல்படுகிறது. 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் கூற்றுப்படி, 2024ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சைபர் மோசடி மூலம் 11,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டது. தேசிய சைபர் குற்ற ஆவண காப்பகத்தின் இணையதளத்தில், ஒவ்வொரு நாளும் 6,000 புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன என்றும், சராசரியாக, ஒவ்வொரு நாளும் 60 கோடி ரூபாயை இந்தியர்கள் இழக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நடந்த மோசடிகளில் மிகவும் பயமுறுத்தும் மோசடியாக டிஜிட்டல் கைது மோசடி உள்ளது. காரணம் என்னவென்றால், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து, பொய்யான குற்றச்சாட்டுகளில் சிக்க வைப்பதாக அச்சுறுத்துகின்றனர். அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெரும் தொகையை பறித்தனர்.
இந்த ஆண்டு, முதலீடுகள், கொள்முதல், கிரிப்டோகரன்ஸிகள் மூலம் பலரும் பணத்தை இழந்துள்ளனர். குளோபல் ஆன்டி-ஸ்காம் அலையன்ஸ் (ஜிஏஎஸ்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் (எஸ்எம்எஸ்) போன்றவை பழசாக இருந்தாலும், தற்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஜி-மெயில் போன்ற தளங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்தாண்டில் மட்டும் ஆசியாவில் அளவில் எடுத்துக் கொண்டால், இணைய மோசடிகளால் 57.1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உலகளவில் இந்த எண்ணிக்கை 85.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சைபர் கிரைம் மோசடி செய்பவர்கள் தங்களை சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத்துறை, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு மையம் போன்ற உயர்மட்ட அரசு நிறுவனங்களின் அதிகாரிகளாக கூறி மக்களிடம் பணம் பறிக்கின்றனர். டிஜிட்டல் கைதுகளால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தங்கள் உயிரையும் இழந்தனர். டிஜிட்டல் கைது மோசடிகள் பெரும்பாலும் மியான்மர், கம்போடியா, லாவோஸ் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து அரங்கேற்றப்படுகின்றன. இந்த கும்பலுக்கு வேலை செய்வதற்காக அவர்கள் இந்திய மக்களை வேலைக்கு பணியமர்த்துகின்றனர்.
அவ்வாறு வேலைக்கு செல்லும் இந்தியர்கள், அவர்களால் சைபர் அடிமைத்தனத்திற்கு தள்ளப்படுகின்றனர். அவர்களை மீட்டு வருவதும் சவாலானதாக மாறிவிடுகிறது. கிரிப்டோகரன்சி, பங்குச் சந்தை மற்றும் பொருட்களில் முதலீடு என்ற பெயரில் மோசடிகள் நடக்கின்றன. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் போலி விளம்பரங்களை வெளியிட்டும் மோசடியில் ஈடுபடுகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 6.69 லட்சம் சிம் கார்டுகள் மற்றும் 1,32,000 ஐஎம்இஐ கார்டுகளை செயலிழக்கச் செய்துள்ளதாக ஐ4சி தெரிவித்துள்ளது.
The post சர்வதேச அளவில் இணையவழி குற்றங்கள் பலமடங்கு அதிகரிப்பு: உலகளவில் 2024ல் ரூ.85.49 லட்சம் கோடி சைபர் நிதி மோசடி appeared first on Dinakaran.