×

சிரியாவில் அதிபர் விரட்டப்பட்ட நிலையில் 60 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆளுங்கட்சி கதை முடிகிறது: கலைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை

டமாஸ்கஸ்: சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்ததைத் தொடர்ந்து, அதிபர் பஷர் அசாத் இம்மாத தொடக்கத்தில், நாட்டை விட்டு தப்பி ஓடி ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். இதன் மூலம் அசாத் குடும்பத்தின் 53 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சிக்கு கிளர்ச்சிப்படை முற்றுப்புள்ளி வைத்தது. புதிய அரசு அமைக்கப்படும் வரை கிளர்ச்சிப்படை இடைக்கால அரசாக நாட்டை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 1963ம் ஆண்டு முதல் சிரியாவில் ஆட்சி செய்து வந்த அரபு சோசலிஸ்ட் பாத் கட்சியை அதிகாரப்பூர்வமாக கலைக்க பலர் குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது அக்கட்சியின் அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைமை உறுப்பினர்கள் பலர் தலைமறைவாகி விட்டனர். சிலர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

கடந்த 1947ம் ஆண்டு அரபு நாடுகளை ஒன்றிணைப்பதை நோக்கமாக கொண்டு பாத் கட்சியை மைக்கேல் அப்லாக், பிடார் ஆகியோர் நிறுவினர். ஆனால் 1970ல் அசாத் குடும்பத்தினர் சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பாத் கட்சியை ஒட்டுமொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். அரசு பணி வேண்டுமென்றால் யாராக இருந்தாலும், பாத் கட்சியில் சேர வேண்டும். இதனால் ஒவ்வொரு ராணுவ வீரரும் பாத் கட்சி உறுப்பினர்களாக உள்ளனர். கட்சியில் சேராவிட்டால் எந்த வேலையும் கிடைக்காத நிலையும் இருந்ததால் பலர் வேறுவழியின்றி பாத் கட்சியில் சேர்ந்ததாக கூறுகின்றனர். இப்போது, புதிய அரசு அமைய இருப்பதால் பாத் கட்சியில் விருப்பமின்றி சேர்ந்த அனைவரும் விலகி உள்ளனர். எனவே இக்கட்சியை கலைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

The post சிரியாவில் அதிபர் விரட்டப்பட்ட நிலையில் 60 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆளுங்கட்சி கதை முடிகிறது: கலைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Syria ,Damascus ,outbreak ,civil war ,President ,Bashar Assad ,Russia ,Assad ,Dinakaran ,
× RELATED சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள்...