பெர்லின்: வலதுசாரி கட்சியை ஆதரிக்கும் எலான் மஸ்க்கை பொருட்டாக மதிக்காத ஜெர்மனி அரசு, முட்டாள்தனமாக பேசுவதாக கூறி உள்ளது. ஜெர்மனியில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் ஓல்ப் ஸ்கோல்சின் 3 கட்சி ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்கூட்டியே வரும் பிப்ரவரி 23ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், ஆல்டர்னேட்டிவ் பார் ஜெர்மனி (ஏஎப்டி) என்கிற வலதுசாரி கட்சிக்கு அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜெர்மனிக்கான நம்பிக்கையின் கடைசி தீப்பொறி என்றும், ஏஎப்டியால் மட்டுமே ஜெர்மனியை காப்பாற்ற முடியும் என்றும் எலான் மஸ்க் கருத்து தெரிவித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான புதிய ஆட்சியில் ஆலோசகர் பதவி கிடைத்ததில் இருந்தே மஸ்க் பல நாடுகளின் அரசியலில் மூக்கை நுழைத்து வருகிறார். ஜெர்மனியில் தனது நிறுவனம் முதலீடு செய்துள்ளதால் அதைப் பற்றி பேச தனக்கு கருத்து சுதந்திரம் உள்ளது என மஸ்க் கூறியிருக்கிறார். இந்நிலையில், இது குறித்து ஜெர்மனி அரசு செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாப்மேன் நேற்று பேட்டி அளிக்கையில், ‘‘கருத்து சுதந்திரம் என்பது மிகப்பெரிய முட்டாள்தனத்தையும் உள்ளிடக்கியது. இதைப் பற்றி வேறெதும் கூற வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஜெர்மனி தேர்தலில் மஸ்க் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பது உண்மைதான்’’ என்றார். மேலும் தங்கள் நாட்டு விவகாரத்தில் மஸ்க் தலையிடுவது ஜெர்மனி அரசியலிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post வலதுசாரிகளை ஆதரித்து ஜெர்மனி தேர்தலில் மூக்கை நுழைக்கும் எலான் மஸ்க்: பதவி வந்ததும் ஓவர் ஆட்டம் appeared first on Dinakaran.