பெய்ஜிங்: மணிக்கு 450 கிமீ வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக புல்லட் ரயிலை சோதித்து சீனா சாதித்துள்ளது. உலகிலேயே சீனாவில்தான் அதிவேக புல்லட் ரயில்களை அதிகமாக இயக்கும் தொலைதூர தண்டவாளம் அமைந்துள்ளது. சீனாவில் மட்டும் 46,000 கிமீக்கு மேல் இந்த வகையிலான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மணிக்கு 450 கிமீ வேகத்தில் செல்லும் சிஆர்450 வகை புல்லட் ரயிலை தயாரித்து அதை சீனா சோதித்து பார்த்துள்ளது. இது உலகின் அதிவேக புல்லட் ரயில் ஆகும். இதற்கு முன்பு சீனாவில் சிஆர்400 ரயில் 350 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக இருந்தது.
இப்போது அந்த ரயிலையும் விட மணிக்கு கூடுதலாக 100 கிமீ வேகத்தில் செல்லும் புதிய சிஆர் 450 ரக புல்லட் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 450 கிமீ வேகத்தில் செல்லும் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் பெய்ஜிங்கிற்கும், ஷாங்காய் நகரத்திற்கும் இடையே நடத்தப்பட்டது. சிஆர்450 ரயிலில் மேம்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த சத்தம், குறைந்த ஆற்றல் நுகர்வு, அதிவேகபயண நேரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் 4,000க்கும் மேற்பட்ட சென்சார்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் விபத்து ஏற்படக்கூடிய அம்சங்களை முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம்.
மேலும் தீவிபத்து நடந்தாலும் அதை கண்டறியும் சென்சாரும் வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் வேகத்தில் ரயில் சென்றாலும் பயணிகளை பாதுகாக்க உயர்மட்ட அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் ரயிலில் இடம் பெற்றுள்ளது. சீனாவில் அதிவேக ரயில் கட்டமைப்பில் பெய்ஜிங்-ஷாங்காய் பாதை மிகவும் லாபகரமானதாக உள்ளது. மற்ற வழித்தடங்களில் இன்னும் லாபம் வரவில்லை. எனவே சீனா தனது அதிவேக ரயில் கட்டமைப்பு தொழில்நுட்பத்தை தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவிற்கு வழங்கி உள்ளது. மேலும் செர்பியாவில் பெல்கிரேட்-நோவி சாட் பாதையை உருவாக்கி, அதில் அதிவேக ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில் இந்தியாவில் இருந்தால் சென்னை டூ கன்னியாகுமரி இடையிலான 739 கிமீ தூரத்தை ஒன்றே முக்கால் மணி நேரத்தில் கடந்துவிடலாம்.
The post மணிக்கு 450 கிமீ வேகம் உலகின் அதிவேக புல்லட் ரயில்: சீனா சோதனை appeared first on Dinakaran.