போடி ரயில் நிலையத்தில் மண்டல அதிகாரி ஆய்வு சென்னைக்கு தினசரி ரயில் சேவை தொடங்கப்படுமா?

*பயணிகள் எதிர்பார்ப்பு

போடி : போடி-மதுரை ரயில்வே அகலப்பாதை தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மதுரை கோட்ட மண்டல மேலாளர் போடி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.போடி-மதுரை மீட்டர்கேஜ் ரயில் சேவையானது கடந்த 1928ம் ஆண்டு நவம்வர் 20ம் தேதி துவக்கப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை செயல்பட்டு வந்தது.

மீட்டர் கேஜ் ரயில் சேவையின்போது மதுரை, நாகமலை, செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வள்ளல்நதி, தேனி கலெக்டர் அலுவலகம், தேனி, பூதிப்புரம், போடி ஆகிய இடங்களில் ரயில்நிறுத்தங்கள் செயல்பட்டு வந்தது.

தேனி மாவட்டத்தில் விளையும் காபி, ஏலம் உள்ளிட்ட விளைபொருள்களை கொண்டு செல்வதற்காகவே ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த சேவையானது பயணிகள் சேவையாக நிலைப்பெற்றது.

மீட்டர் கேஜ் ரயில் சேவையின்போது, தேனி மாவட்டத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு ஏலம் அனுப்பப்பட்டது. தற்போது இந்த மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு போடியில் இருந்து சென்னைக்கு பயணிகள் ரயில் சேவை நடைபெற்று வருகிறது.இச்சேவையானது, வாரத்தில் மூன்று நாட்கள் போடியில் இருந்தும், சென்னையில் இருந்தும் புறப்படும் வகையில் உள்ளது.

போடியில் இருந்து சென்னைக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு கிழமைகளிலும், சென்னையில் இருந்து போடிக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. இந்த ரயிலானது போடியில் புறப்பட்டு, தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி, வேலூர் வழியாக சென்னையை சென்றடைகிறது. இதனால் போடியில் இருந்து சென்னைக்கு இந்த ரயிலில் ஒவ்வொரு முறையும் சராசரியாக 500 பேர் வரை பயணித்து வருகின்றனர்.

மண்டல மேலாளர் ஆய்வு: தற்போது போடியில் இருந்து மதுரை வரை டீசல் இன்ஜின் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போடி-மதுரை தடத்தில் மின்மயமாக்கம் செய்யும் பணிகளும் நடைபெற்று வந்தன. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளன.

தொடர்ந்து போடியில் இருந்து மதுரை வரை மின்சார ரயில்களை இயக்குவது தொடர்பான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரை கோட்ட மண்டல மேலாளர் சரத்  வஸ்தவா போடி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தற்போதைய இருப்பு பாதையின் செயல்பாடு, மின்மயமாக்கல் நிறைவு, தீத்தடுப்பு அபாய ஒலிபெருக்கி செயல்பாடு தொடர்பான விவரங்களை அவர் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் ரயில் தடத்தின் குறுக்கே வெண்ணிமலை தோப்பு பகுதிக்கு செல்லும் சுரங்கப்பாதையில் விரிசலால் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து வியாபாரிகள் அவரை சந்தித்தனர்.

சென்னைக்கு தினசரி இயக்க கோரிக்கை: போடி-மதுரை பயணிகள் ரயில் காலையில் புறப்படும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும், போடி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என அப்போது அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

விரைவில் போடி-மதுரை ரயில் காலையில் புறப்படும் நேரம் மாற்றப்படலாம் எனவும், மின்சார ரயில் தடத்தில் விரைவில் சோதனை துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மின் தடம் செயல்பாட்டுக்கு வந்தால் சென்னைக்கு தினசரி ரயில் சேவை துவங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post போடி ரயில் நிலையத்தில் மண்டல அதிகாரி ஆய்வு சென்னைக்கு தினசரி ரயில் சேவை தொடங்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: