பெங்களூரு: கர்நாடக பாஜ எம்எல்ஏ முனிரத்னா கொரோனா காலத்தில் தன்னிடம் உதவி கேட்டு வந்த 40 வயது பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி அப்பெண்ணை மிரட்டி இரண்டு ஆண்டாக பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் முனிரத்னா மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீது போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் 2,481 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் தொடர்பாக பாஜ எம்எல்ஏ முனிரத்னா, அவரது மூன்று கூட்டாளிகள் ஆர்.சுதாகர், பி.நிவாஸ் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பி.அய்யன்னா ரெட்டி ஆகியோர் மீதும் கர்நாடக சிஐடி மற்றும் எஸ்ஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், ‘பாஜ எம்எல்ஏ முனிரத்னா கடந்த 2020ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரது மூன்று கூட்டாளிகளான ஆர்.சுதாகர், பி.நிவாஸ் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பி.அய்யன்னா ரெட்டி ஆகியோர் பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான ஆதாரங்களை அழித்துள்ளனர். மேற்கண்ட குற்றப்பத்திரிகையில் 146 சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் 850 ஆவண ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி பாதித்த பெண்களை அனுப்பி எதிரிகளை பழி வாங்கினார்
எம்எல்ஏ முனிரத்னா, பாலியல் தொற்று நோயான எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பெண்களை பயன்படுத்தி, தன்னுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்கி உள்ளார். இதற்காக பல பெண்களை பயன்படுத்தி உள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
The post பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜ எம்எல்ஏ முனிரத்னா மீது 2,481 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.