புதுடெல்லி: ‘உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழி என்பது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிறு, அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டின் கடைசி மன் கி பாத்தில் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:
வரும் ஜனவரி 26ம் தேதி நமது அரசியலமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டு நிறைவடைய இருக்கிறது. இது நம் அனைவருக்கும் கவுரமிக்க தருணம். நமது அரசியலமைப்பு சட்டம் அனைத்து காலகட்டங்களிலும் வெற்றிகரமாக வழிகாட்டியிருக்கிறது. கடந்த நவம்பர் 26ம் தேதி அரசியல் சட்டதினம் தொடங்கி ஓராண்டுகாலம் வரை நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக constitution75.com என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த இணையத்தளத்தை பார்வையிட்டு, தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த மாதம் 13ம் தேதி முதல் உபியின் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நடக்க உள்ளது. அதற்காக தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மகாகும்பமேளாவின் விசேஷம் பிரமாண்டம் மட்டுமல்ல, அதன் பன்முகத்தன்மையும் கூட. கும்பமேளாவில் எங்கும் எந்த வேறுபாடும் காணப்படாது. பெரியவர்-சிறியோர் என்று ஒன்றும் கிடையாது. வேற்றுமையில் ஒற்றுமையின் இந்தக் காட்சியை உலகில் வேறு எங்குமே காண இயலாது. நமது கும்பமேளா ஒற்றுமையின் மகாகும்பமேளாவாக திகழ்கிறது.
உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்மொழி என்பது இந்தியர்கள் அனைவருக்கும் இது பெருமை சேர்க்கும் விஷயம். உலகெங்கிலும் இருக்கும் நாடுகளில் தமிழ்மொழி கற்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில், பிஜியில் இந்திய அரசின் உதவியோடு தமிழ் பயில்விக்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதில் பிஜியின் மாணவர்கள் தமிழ்மொழியையும், சமஸ்கிருதத்தையும் கற்றுக் கொள்ள நிறைய ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. கலை முதல் ஆயுர்வேதம், மொழி, இசை என அனைத்தும் இந்தியாவில் கொட்டிக் கிடக்கிறது, இதுவே உலகை மயக்குகிறது.
அனைவருக்கும் 2025ம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உடல்நலத்தோடு இருங்கள், சந்தோஷமாக இருங்கள், வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றம் காணுங்கள் என்றார்.
பிப்ரவரியில் வேவ்ஸ் மாநாடு
பமுதல் முறையாக வரும் பிப்ரவரியில் உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை (வேவ்ஸ்) மாநாட்டை இந்தியா நடத்த இருப்பதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று தெரிவித்துள்ளார். பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரை நடக்க உள்ள இந்த மாநாடு, இந்தியாவின் படைப்பாற்றல் திறனை உலகிற்கு வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு என குறிப்பிட்ட பிரதமர் மோடி, உலகளாவிய உள்ளடக்க உருவாக்கத்தின் மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு ஒரு முக்கியமான படியாகும் என்றார்.
The post பிரதமர் மோடி பெருமிதம் உலகின் தொன்மையான மொழி தமிழால் பெருமை கொள்வோம் appeared first on Dinakaran.