இதேபோல், பூங்காக்களில் தூய்மை பணிகள், விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், பெருமளவு குப்பை சேகரமாகும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து, அவ்விடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், சேதமடைந்த குப்பைத் தொட்டிகளுக்கு மாற்றாக புதிய குப்பைத் தொட்டிகள் வைத்தல் உள்ளிட்ட தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் மக்களின் சுகாதாரத்தைப் பேணுகின்ற வகையிலும், தூய்மையான நகரமாக விளங்குகின்ற வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் அமைக்கப்பட்ட அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் கடந்த ஆகஸ்டு 21ம் தேதி முதற்கட்டமாக தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள், கட்டிடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அகற்றுதல், பயணியர் இருக்கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, 2ம் கட்டமாக 15 மண்டலங்களிலும் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களிலும், இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை ஒரேநேரத்தில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பணிகளில் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றுதல், இருக்கைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தை சுத்தம் செய்து, பேருந்து நிழற்குடைகள் முழுவதையும் தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்தல், நிழற்குடைகளில் உள்ள பழுதுகளை அடையாளம் கண்டு, அவற்றின் அளவீடுகளை கணக்கெடுத்து மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சியில் 418 கி.மீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இவற்றில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சீராக செல்வதற்கும், நடைபாதைகளில் மக்கள் சிரமமின்றி செல்வதற்கும் ஏற்ப, ஆணையர் குமரகுருபரன் உத்தரவின்படி தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. பிரதான சாலைகளில் தூய்மை பணி நிறைவுற்ற பிறகு, உட்புற சாலைகளில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதில் சாலையோரம் நீண்ட நாட்களாக கொட்டப்பட்டு கிடக்கும் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இதோடு சேர்த்து, முதற்கட்டமாக 1315 வாகனங்கள் சாலையோரங்களில் கேட்பாரற்று கிடப்பது கண்டறியப்பட்டு, அவையும் அகற்றப்பட்டன. அதேபோல், மாநகர பகுதியில் பெரும்பாலான பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அசுத்தமாக காணப்பட்டன. மது போதையில் இருப்போர், மனநலம் பாதிக்கப்பட்டோர் நிரந்தரமாக வசிக்குமிடமாகவும் காட்சியளித்தது.
பல இடங்களில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அரசின் சாதனை விளம்பரங்கள் மீது கட்சி மற்றும் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளித்தன. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற நிலையில், ஆணையர் குமரகுருபரன் உத்தரவின்படி, முதற்கட்ட தீவிர தூய்மை பணியின் ஒரு பகுதியாக மாநகராட்சி பேருந்து நிறுத்த நிழற்குடைகளை தூய்மைபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதை தொடர்ந்து 2ம் கட்டமாக இன்று 1,363 பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது,’’ என்றனர்.
The post சென்னையில் 2ம் கட்டமாக இன்று 1,363 பஸ் நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணிகள்: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.