ஓஎம்ஆர் சாலையில் உப்பளத்துக்காக வழங்கப்பட்ட 5 ஆயிரம் ஏக்கர் அரசு நிலத்தை வேறு திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும்: திருப்போரூர் பகுதி மக்கள் வலியுறுத்தல்

சென்னை: உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதன் விளைவாக திருப்போரூர் ஓ.எம்.ஆர். சாலையில் வீணாக கிடக்கும் 5 ஆயிரம் ஏக்கர் அரசு நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேளம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் வரை பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை இடையே சுமார் 6 ஆயிரம் ஏக்கர் உப்பளம் உள்ளது. இந்த உப்பளத்தில் கடந்த ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஏராளமான உப்பு உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு இங்குள்ள நிலங்களை ஒன்றிய அரசு கைப்பற்றி உப்பு வாரியத்திடம் ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து உப்பு உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டு சிறு தொழிலாக உப்பு உற்பத்தி நடைபெற்று வந்தது.

அதிக வெயில் அடிக்கும் காலங்களில் மட்டும் தூத்துக்குடி பகுதியில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து உப்பு உற்பத்தியில் ஈடுபடுவர். கேளம்பாக்கம், தையூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர், ஆலத்தூர், தண்டலம், கூத்தவாக்கம், பையனூர், மாமல்லபுரம் வரை இந்த உற்பத்தி தொழில் நடைபெற்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெற்று வந்தனர்.

இந்நிலையில் திருப்போரூர் பகுதியில் உள்ள உப்பள நிலத்தை நீண்ட கால குத்தகை அடிப்படையில் பெற்ற தனியார் நிறுவனம் சுமார் 50 ஆண்டுகளாக உப்பு உற்பத்தி மேற்கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு குத்தகை முடிவடைந்து நிலத்தை ஒன்றிய அரசு கையகப்படுத்தியுள்ளது. கோவளம், கேளம்பாக்கம், தையூர் பகுதிகளில் மட்டும் தற்போது உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர் ஆகிய இடங்களில் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் குத்தகை காலம் முடிவு, கூடுதல் செலவினங்கள் ஆகியவற்றின் காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு சுமார் 5000 ஏக்கர் உப்பள நிலம் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்த நிலத்தை ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்ற கருத்து சமூக ஆர்வலர்களிடையே தற்போது எழுந்துள்ளது.

குறிப்பாக சென்னை விமான நிலையத்தை இப்பகுதியில் அமைக்க கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. மேலும் 55 ஏக்கர் நிலத்தை சென்னை கிரிக்கெட் சங்கத்திற்கு ஸ்டேடியம் அமைக்க குத்தகை அடிப்படையில் வழங்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், ஆட்சி மாற்றத்தின் காரணமாக இப்பணிகள் தொடங்கப்படவே இல்லை. மேலும், விமான ஓடுதளம் அமைக்க ஏதுவானதாக உப்பு மண் இருக்காது என்பதாலும், மிக அருகில் கல்பாக்கம் அணு மின் நிலையம் இருப்பதாலும் இத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து தி.மு.க. அரசு மீண்டும் பொறுப்பேற்றதும் இந்த நிலத்தில் சுமார் 500 ஏக்கர் நிலத்தை மட்டும் தமிழ்நாடு உப்பு வாரியத்திற்கு வழங்கி மீண்டும் உப்பு உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த இரு ஆண்டு காலமாக கோடை காலங்களில் இந்த பரிசோதனை நடைபெற்று தண்ணீரில் போதிய உப்புத்தன்மை இல்லை என அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டது. இதையடுத்து உப்பு வாரியத்திடம் இருந்து மீண்டும் தமிழ்நாடு அரசிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் எந்த பயன்பாடும் இல்லாமல் இருக்கும் அரசுக்குச் சொந்தமான இந்த 5000 ஏக்கர் உப்பள நிலத்தை மண்வளப் பரிசோதனை மேற்கொண்டு அதை உரிய முறையில் வேதியியல் மாற்றம் செய்து பல்கலைக்கழகம், சிறு விமான நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும் என்று இப்பகுதி பொதுமக்கள் கருதுகின்றனர். உப்பள நிலமாக இருப்பதால் இவற்றைச் சுற்றி உள்ள தனியார் நிலங்களும் எந்த வளர்ச்சியும் பெறாத நிலை உள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்கள் வந்தால் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு நடுவே இருந்தும் பயன்பாடில்லாமல் கிடக்கும் இந்த 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

The post ஓஎம்ஆர் சாலையில் உப்பளத்துக்காக வழங்கப்பட்ட 5 ஆயிரம் ஏக்கர் அரசு நிலத்தை வேறு திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும்: திருப்போரூர் பகுதி மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: