சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சில கோயில்கள் இரவு 12 மணிக்கும், சில கோயில்கள் விடியற்காலை 4 மணிக்கும் நடைகள் திறக்கும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2023ம் ஆண்டு முதல் தெய்வத் திருஉருவப் படங்களுடன் கூடிய நாட்காட்டி தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 2025ம் ஆண்டிற்கான நாட்காட்டியினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: 2023 ஆம் ஆண்டு முதல் துறையின் சார்பில் தெய்வத் திருஉருவப் படங்களுடன் கூடிய நாட்காட்டி வெளியிடப்பட்டு வருகிறது. சிறிய நாட்காட்டிகளை பொறுத்தளவில் 2023 ஆண்டு 30 ஆயிரம் எண்ணிக்கைகளும், 2024 ஆண்டு 25 ஆயிரம் எண்ணிக்கைகளும் தயார் செய்யப்பட்டு, துறை சார்பில் நடத்தப்படும் 104 ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டன.
அச்சிடப்பட்ட செலவீனம் போக, விற்பனை வாயிலான கிடைக்கப் பெற்ற வருவாய் ரூ. 6 லட்சத்தில் பெரிய நாட்காட்டிக்கான தயாரிப்பு செலவினம் போக ரூ. 3 லட்சம் திருக்கோயில்களுக்கு வருமானமாக கிடைத்துள்ளது. கோயில் அறங்காவலர் குழு நியமனத்தை பொறுத்தளவில் கடந்த காலங்களில் இதுபோன்று அறங்காவலர் குழுக்கள் நியமிக்கப்படவே இல்லை. அதிமுகவோடு திரை மறைவில் ஒட்டி உறவாடுகின்ற, இந்த குற்றச்சாட்டை கூறிய சட்டமன்ற உறுப்பினர் வானதி கடந்த காலங்களில் எவ்வளவு கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமித்தனர் என்ற பட்டியலை வெளியிடட்டும்.
அறங்காவலர் குழு நியமனத்திற்கு இதுவரையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு முறைப்படியான அறிவிப்புகளை விளம்பரங்கள் செய்தும், அந்தந்த கோயில் விளம்பரப் பலகையிலும் வெளியிட்டுள்ளோம்.இதுவரை 17 ஆயிரம் சிறிய கோயில்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சில கோயில்கள் இரவு 12 மணிக்கும், சில கோயில்கள் விடியற்காலை 4 மணிக்கும் திறக்கும் வழக்கம் உள்ளது. இது சம்பந்தமாக ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளே கடைபிடிக்கப்படும். திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் போடப்பட்ட செல்போன் விவகாரத்தில் வரும் ஜனவரி 2 அல்லது 3 ஆம் தேதிக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆங்கிலப் புத்தாண்டையொட்டி இரவு 12 மணிக்கு கோயில் நடைதிறப்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.