*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
புதுச்சேரி : புதுச்சேரியில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்துள்ளனர். இவர்கள் கடற்கரையை சுற்றிப்பார்ப்பதற்காக அங்கு குவிந்து வருவதால் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக கடற்கரை சாலை, பாரதி பூங்கா சாலை, சட்டசபை அருகில், தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அங்குள்ள ஒயிட் டவுன் பகுதிகளில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன.
இதனால் கடற்கரை மற்றும் ஒயிட் டவுன் பகுதிகளில் செல்லும் சுற்றுலா பயணிகளை நாய்கள் குரைப்பதும், துரத்துவதுமாக உள்ளது. ஆகையால் புதுவை வரும் சுற்றுலா பயணிகள் தெருநாய்களால் பீதியாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர்.
அப்போது 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் வயதான சுற்றுலா பயணிகள் இருவரை அச்சுறுத்தும் வகையில் சூழ்ந்ததால் அவர்கள் பதட்டம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அந்த நாய்களை துரத்திவிட்டு அவர்களை மீட்டனர். எனவே கடற்கரை சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
The post கடற்கரையில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள் appeared first on Dinakaran.