பெங்களூரு: எச்.ஐ.வி பாதித்த பெண்களை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தியும், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியவருமான கர்நாடகா பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக 2,481 பக்கத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பெங்களூருவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள லக்கெரே, லட்சுமிதேவி நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கர்நாடக பாஜக எம்எல்ஏவுமான முனிரத்னா பங்கேற்றார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, முனிரத்னா எம்எல்ஏ மீது காங்கிரஸ் கட்சியினர் முட்டைகளை வீசியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பொது நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிச் செல்லும் போது தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து முனிரத்னா கூறுகையில், ‘என்னை கொல்ல சதி நடக்கிறது. எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர் குசுமா, அவரது தந்தை ஹனுமந்தராயப்பா ஆகியோர் தான் காரணம். என் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தியது குறித்து போலீசில் புகார் அளிப்பேன்’ என்றார். இதற்கிடையே பாஜக எம்எல்ஏவுமான முனிரத்னா மீது பாலியல் பலாத்கார வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கின் குற்றப்பத்திரிகை விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ முனிரத்னா, அவரது மூன்று கூட்டாளிகள் ஆர்.சுதாகர், பி.நிவாஸ் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பி.அய்யன்னா ரெட்டி ஆகியோர் மீது கர்நாடக சிஐடி மற்றும் எஸ்ஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2,481 பக்க குற்றப்பத்திரிகையில், ‘பாஜக எம்எல்ஏ முனிரத்னா கடந்த 2020ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரது மூன்று கூட்டாளிகளான ஆர்.சுதாகர், பி.நிவாஸ் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பி.அய்யன்னா ரெட்டி ஆகியோர் பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான ஆதாரங்களை அழித்துள்ளனர்.
எம்எல்ஏ முனிரத்னா, பாலியல் தொற்று நோயான எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பெண்களை பயன்படுத்தி, தன்னுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்கி உள்ளார். இதற்காக பல பெண்களை பயன்படுத்தி உள்ளார். மேற்கண்ட குற்றப்பத்திரிகையில் 146 சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் 850 ஆவண ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
மேற்கண்ட வழக்கு மட்டுமின்றி முனிரத்னா மீதான அட்டூழியங்கள், லஞ்சம் மற்றும் மோசடி போன்ற பிற வழக்குகளையும் எஸ்ஐடி விசாரித்து வருகிறது. எனினும், இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகை விபரங்கள் வெளியாகி உள்ளதால், அவருக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்களும், முட்டை வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
The post எச்.ஐ.வி பாதித்த பெண்களை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தி பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜக எம்எல்ஏ மீது 2,481 பக்கத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.