திருப்போரூர்: திருப்போரூர் முருகன் கோயிலுக்கு பல்வேறு வகைகளில் ஒரு ஆண்டுக்கு ₹5 கோடிக்கு மேல் வருவாய் கிடைப்பதால், செயல் அலுவலர் நிலையில் இருந்து உதவி ஆணையர் நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டு, முக்கிய முடிவுகளை உதவி ஆணையரே எடுத்தால் கோயில் சார்ந்த பணிகள் வேகமெடுக்கும் என அனைத்து தரப்பினரும் நம்புகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் புகழ் பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றான கந்தசாமி கோயில் உள்ளது. கடந்த, 17ம் நூற்றாண்டில் சிதம்பர சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில் ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலின் 14வது ஆதீனமாக அருளாட்சி செய்து வந்த சிதம்பர சிவஞான சுவாமி கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் சித்தியடைந்தார். அவருக்கு பிறகு புதிய ஆதீனம் நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது, வரை இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அளவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இக்கோயிலுக்கு என திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், வாலாஜாபாத், தண்டலம், ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், இடையன்குப்பம், செங்காடு, சந்தனாம்பட்டு, பொன்மார், பஞ்சந்தீர்த்தி, மடையத்தூர், காட்டூர், கடம்பூர், பூண்டி, ஓங்கூர், ஆத்தூர், கீழுர், வெண்பாக்கம் ஆகிய 18 கிராமங்களில் சுமார் 616 ஏக்கர் விளை நிலங்கள், சென்னையில் மயிலாப்பூர், மண்ணடி, திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை ஆகிய இடங்களிலும் சுமார் ₹4,000 கோடி மதிப்புடைய சொத்துக்கள் உள்ளன. இதுமட்டுமின்றி, கோயிலில் முடி காணிக்கை, பிரசாதக்கடை விற்பனை, வாகன நிறுத்தம், கழிப்பறை, நெய் தீபம் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்ெகாள்ள ஏலம் விடப்பட்டு, அவற்றின் மூலம் ஆண்டிற்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாயும், நிலக்குத்தகை மற்றும் கட்டிட வாடகை மூலம் ஆண்டிற்கு 60 லட்சம் ரூபாயும், உண்டியல் காணிக்கை மூலம் 2.5 கோடி ரூபாயும் ஆக மொத்தம் ஒரு ஆண்டிற்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் உள்ள கோயில்களை உதவி ஆணையர் பராமரிப்பின் கீழ் கொண்டு வந்து நிர்வகிக்கப்பட வேண்டும். அந்த வகையில் பார்த்தால் திருப்போரூர் கோயிலில் தற்போது வரை ஆண்டிற்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வருகிறது. ஆகவே, செயல் அலுவலர் நிலையில் இருந்து உதவி ஆணையர் நிலைக்கு தரம் உயர்த்தப்படுவதன் மூலம் துறையில் பல்வேறு முக்கிய முடிவுகளை உதவி ஆணையரே அறிவித்து செயல்படுத்த முடியும் என்றும், இதன் மூலம் நிர்வாக பணிகள் எளிதில் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும், கோயில் மற்றும் அதை சார்ந்துள்ள பணிகள் வேகமெடுக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஆகவே, இந்து சமய அறநிலையத்துைற திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தின் தரத்தை செயல் அலுவலர் அளவிலிருந்து உதவி ஆணையர் தரத்திற்கு உயர்த்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
The post ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாக தரம் உயர்த்தப்படுமா?: எதிர்பார்ப்பில் பக்தர்கள் appeared first on Dinakaran.