×

இறந்த விஷயம் தெரியாமல் கணவரின் உடலுடன் 5 நாள் வசித்த மூதாட்டி: திருப்புத்தூரில் பரபரப்பு

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர், கல்லாக்குழி தெருவைச் சேர்ந்தவர் ஆதிரத்தின மூர்த்தி (62). இவர் திருப்புத்தூர் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி பரிமளம் (56). சற்று மனநிலை பாதித்தவர். குழந்தை இல்லை. கடந்த சில நாட்களாக ஆதிரத்தின மூர்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு நடமாட்டம் இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று காலை இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருப்புத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

வீட்டிற்கு வந்த போலீசார் கதவை நீண்டநேரம் தட்டியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். போலீசார் பார்த்தபோது, ஆதிரத்தின மூர்த்தி இறந்து அழுகிய நிலையில் கிடந்தார். பரிமளம் அருகில் இருந்துள்ளார். பரிமளத்திடம் போலீசார் கேட்டபோது, கணவர் தூங்குவதாகவும், அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆதிரத்தின மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கூறுகையில், ‘‘ஆதிரத்தின மூர்த்தி 5 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம். அதனால் உடல் அழுகியுள்ளது’’ என்றனர்.

The post இறந்த விஷயம் தெரியாமல் கணவரின் உடலுடன் 5 நாள் வசித்த மூதாட்டி: திருப்புத்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ancestor ,Tiruptuthur ,Aitradthina Murthy ,Sivaganga District, Tiruptudur, Kallakuzhi Street ,Tiruptudur College ,Parimalam ,
× RELATED கழுத்தை அறுத்து மூதாட்டி தற்கொலை