- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன் அரசு
- திமுக
- மன்மோகன் சிங்
- சென்னை
- பிரதி பொது செயலாளர்
- மத்திய அமைச்சர்
- ஆ.ராஜா எம்.பி
- திமுக…
- தின மலர்
சென்னை: திமுக அங்கம் வகித்த மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ்நாடு செழித்தது என்றும், அப்போது தமிழ்நாட்டுக்கு கிடைத்த நன்மைகளை பட்டியலிட்டும் திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. திமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசா எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக அங்கம் வகித்த 2004-2014 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாட்டிற்கு வழங்கினார்.
10 ஆண்டு கால மன்மோகன் சிங் அமைச்சரவையில் திமுக உள்ளிட்ட 21 தமிழர்கள் ஒன்றிய அமைச்சர்களாக இடம் பெற்றனர். நிதி, நெடுஞ்சாலை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுகாதாரம் எனப் பல முக்கிய துறைகளை பெற்று, தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை மன்மோகன் சிங் ஆட்சியின் போது கொண்டு வந்தோம். தமிழ் செம்மொழியாக பிரகடனம், சென்னையில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள்.
சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு, திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம், கடல்சார் தேசிய பல்கலைக் கழகம், வளர்ந்த நாடுகளுக்கு இணையான 3 ஜி தகவல் தொழில் நுட்பத் திட்டம், 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி, 32 சதவிதமாக இருந்த தொலைபேசி அடர்த்தி 80 சதவிகிதமாக உயர்வு மற்றும் 3,276 கிலோ மீட்டர் சாலைகள் 4 வழிச் சாலைகளாக மேம்பாடு, ஒரகடத்தில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை ஆராய்ச்சி மையம்,
1,553 கோடி ரூபாய் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச தர அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம், சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம், நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், சென்னை மாநகரில் மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், 6,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலை என எண்ணற்ற வளர்ச்சி திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரக் காரணமாயிருந்தார் மன்மோகன் சிங்.
2024 மக்களவை தேர்தலில் 40க்கு 40 வென்ற திமுக கூட்டணி எம்.பி.க்கள், நாடாளுமன்ற கேண்டினில் வடையும் பஜ்ஜியும்தானே சாப்பிடுவார்கள் என வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டும் ஏளன பேச்சு பேசும் அரசியல் சூனியங்களுக்குக் கடந்த குளிர்கால கூட்டத் தொடரில் தமிழ்நாட்டு எம்.பி-கள் என்னவெல்லாம் செய்தார்கள்? என்ற ஒரு பட்டியலை முதல்வர் சொன்னார். அரசியல் அரைவேக்காடுகளுக்குக் கடந்த மாதம் நடந்ததும் தெரியாது, கடந்த கால சாதனைகளும் புரியாது.
கல்விதான் ஒட்டு மொத்த சமூகத்தையும் முன்னேற்றும் ஆயுதம் என அதன்படியே தன் வாழ்வை அமைத்து, அதன் வழியே நல்லாட்சி நல்கி இன்று நம்மை விட்டுப் பிரிந்துள்ளார் மன்மோகன் சிங். மாநில உரிமைகளையும், மக்களையும் மதித்து ஆட்சி புரிந்தவர் மன்மோகன் சிங். அவரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திமுக அங்கம் வகித்த ஒன்றிய ஆட்சியில் தமிழ்நாடு செழித்தது மாநில உரிமை, மக்களை மதித்து ஆட்சி புரிந்தவர் மன்மோகன் சிங்: நன்மைகளை பட்டியலிட்டு திமுக அறிக்கை appeared first on Dinakaran.