ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பால்சம் மலர் அலங்காரம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கோடை சீசனுக்காக தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டது. விதைப்பு மற்றும் நாற்று உற்பத்தியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பூங்கா மலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதேசமயம், பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் தொட்டிகளில் மலர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இதில், பால்சம், பிகோனியோ, சைக்ளோமென் போன்ற மலர் தொட்டிகளை கொண்டு மலர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள பெரணி செடிகள் மற்றும் கள்ளிச் செடிகளையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
The post ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் பால்சம் மலர் அலங்காரம் appeared first on Dinakaran.