தமிழ்நாடு முதல்வரின் கல்வித் திட்டங்கள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் புத்தக வடிவில் சமர்பிப்பு


சென்னை: தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியும் சிங்கப்பூர் சென்றார். 3 நாள் கல்விச் சுற்றுலா இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அமைச்சரும் மாணவர்களும் இன்று தமிழ்நாடு திரும்புகின்றனர். முன்னதாக சிங்கப்பூர் கல்விச் சுற்றுலா குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கல்விச்சுற்றுலாவாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் வந்து சேர்ந்ததோம். இந்த நாட்டில் தேசிய நூலகங்கள் பல்கலைக் கழகங்கள் போன்ற அறிவுசார் மையங்களை மாணவர்களுடன் இணைந்து பார்வையிட்டோம். மேலும் சிங்கப்பூர் நாட்டில் அமைந்துள்ள Gardes By the Bay என்ற நகர்ப்புற பூங்காவை தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.

இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் இந்தப்பூங்கா 260 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 1.5 மில்லியனுக்கும் அதிகமான தாவரங்களை கொண்டுள்ள இந்த பூங்காவை இதுவரை 100 மில்லியனுக்கும் அதிமான பார்வையாளர்கள் கண்டு களித்துள்ளனர். இயற்கை ஆர்வலர்களும் அறிவியலாளர்களும் வியந்து பார்க்கும் இந்த பூங்காவை மாணவர்களுடன் பார்த்ததில் மகிழ்ச்சி. சிங்கப்பூர் நாட்டின் நீடித்த நிலைத்தன்மைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயிற்சிகள் குறித்த பல்வேறு தகவல்களை அளிக்கும் Marina Garage என்ற இடத்துக்கு மாணவர்களுடன் சென்றிருந்தோம். சிங்கப்பூர் நாட்டின் கட்டமைப்பில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்தும் வருங்காலத்தின் செயல்பாடுகள் குறித்தும் கல்விசார் பயிற்றுநர்கள் விளக்கம் அளித்தனர். அவர்களிடமிருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆர்வமுடன் கேள்விகளாக கேட்டு விளக்கம் பெற்றனர்.

நகர கட்டுமானம் மற்றும் வாழ்வியல் குறித்தான புதிய தகவல்களை மாணவர்கள் இந்த இடத்தில் பெற்றுள்ளனர். சிங்கப்பூரில் 3ம் நாள் பயணத்தில் அங்குள்ள புகழ்பெற்ற தேசிய பல்கலைக் கழகத்துக்கு சென்றோம். அங்குள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் சிங்கப்பூர் தேசிய நூலகத்துக்கும் மாணவர்கள் சென்றனர். அந்த நூலக அதிகாரியிடம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து மாணவர்கள் விளக்கம் அளித்து, தமிழ்நாடு வெளியிட்டுள்ள திட்ட புத்தகங்களையும் வழங்கினர். கல்வி முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை விவரிக்கும் இந்த புத்தகத்தை சிங்கப்பூர் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று சிங்கப்பூர் தேசிய நூலக அதிகாரி தெரிவித்தார்.

The post தமிழ்நாடு முதல்வரின் கல்வித் திட்டங்கள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் புத்தக வடிவில் சமர்பிப்பு appeared first on Dinakaran.

Related Stories: