உ.பி. மகா கும்பமேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு


திருமலை: உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் தொடங்கும் மகா கும்பமேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில் அமைத்து பூஜைகள் மேற்கொள்ள திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலக கூட்டரங்கில் அதிகாரிகளுடன் ஆய்வுகூட்டம் கூடுதல் செயல் அலுவலர் கவுதமி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவின்படி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அலகாபாத்தில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகாகும்ப மேளா நடக்கிறது. அப்போது அங்கு ஏழுமலையான் மாதிரி கோயில் அமைத்து திருமலையில் நடைபெறும் பூஜைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற புனிதமான இடத்தில் மாதிரி கோயில் அமைத்து பூஜைகள் மேற்கொள்ளும்போது ஆன்மிகம் மேலும் அதிகரிக்கும். எனவே கோயில் அமைத்து ஜனவரி 12ம்தேதி சுவாமிக்கு சம்ப்ரோக்ஷணம் செய்து சிலை பிரதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஜனவரி 13ம்தேதி முதல் சுப்ரபாத சேவை முதல் ஏகாந்த சேவை வரை அனைத்து சேவைகளும் நடத்தப்படும். இவற்றில் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள். அனைவருக்கும் அன்னபிரசாதம், லட்டு பிரசாதம் வழங்கப்படும். இதுதவிர ஒவ்வொரு நாளும் தேவஸ்தானம் சார்பில் இசைக்கச்சேரி நடத்தப்படும் என்றார்

ரூ4.18 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரேநாளில் 59,564 பேர் தரிசனம் செய்தனர். 24,905 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ4.18 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி கிருஷ்ண தேஜா கெஸ்ட் ஹவுஸ் பகுதி வரை என சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் காத்துள்ளனர். இவர்கள் 20 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post உ.பி. மகா கும்பமேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: