முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங்குக்கு தலைவர்கள் அஞ்சலி: மோடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை, முழு அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல், சோனியா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று அவரது உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9.51 மணிக்கு காலமானார். அவரது வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அவரது உடல் நேற்று காலை டெல்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடல் இருந்த பெட்டி மீது மூவர்ண கொடி போர்த்தப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நட்டா உள்ளிட்டோர் மன்மோகன்சிங் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அதே போல் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் மன்மோகன்சிங் மனைவி குர்சரண் கவுர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, டெல்லி முதல்வர் அடிசி, டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் உள்ளிட்டோரும் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

மன்மோகன்சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், மன்மோகன்சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தேசிய வாழ்வில் முத்திரை பதித்த ஒரு சிறந்த அரசியல்வாதி, புகழ்பெற்ற தலைவர் என பாராட்டி, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியதுடன், இரங்கல் தீர்மானம் நிறைவேறியது. மேலும் மன்மோகன்சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனவரி 1ம் தேதி வரை 7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. மேலும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

மன்மோகன்சிங்கின் உடல் இன்று தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி ஊர்லம் இன்று காலை 9.30 மணிக்கு டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக காலை 8 மணி முதல் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மன்மோகன்சிங் உடல் வைக்கப்படும். அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு டெல்லி நிகாம்போத் காட்டில் உள்ள மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பகல் 11:45 மணிக்கு நிகாம்போத் காட் மயானத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும். முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மன்மோகன்சிங் இறுதிச்சடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கும் இன்று அரைநாள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சல் அரசுக்கு 2 நாள் விடுமுறையும், கர்நாடகாவில் நேற்று ஒருநாளும் விடுமுறை அளிக்கப்பட்டது.

* மன்மோகன்சிங் மறைவு நாட்டுக்கே பேரிழப்பு: பிரதமர் மோடி புகழஞ்சலி
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி, நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கின் மறைவு நம் அனைவரையும் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மன்மோகன் சிங் மறைவு நாட்டுக்கே பேரிழப்பு ஆகும். அவரது வாழ்க்கை வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாகும்.

நாம் எவ்வாறு போராட்டங்களை தாண்டி, உயர முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அவர் எப்போதும் ஒரு நேர்மையான மனிதராக, சிறந்த பொருளாதார நிபுணராக நினைவுகூரப்படுவார். ஒரு பொருளாதார நிபுணராக, அவர் நாட்டுக்கு பல்வேறு சேவைகளை வழங்கினார். சவாலான நேரத்தில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றினார். பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருந்த நாட்டிற்கு பொருளாதாரத்தில் ஒரு புதிய திசையை உருவாக்கிக் கொடுத்தார்.

முக்கியமான சந்தர்ப்பங்களில் எல்லாம், அவர் சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்திற்கு வந்து ஒரு எம்.பி.யாக தனது கடமையைச் செய்தார். அவர் எப்போதும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் தனது நல்லுறவைப் பேணி வந்தார். நான் முதல்வராக இருந்தபோது, ​​அவருடன் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்திருக்கிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமக்கள் சார்பாகவும், மன்மோகன் சிங்கிற்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* நினைவிடம் கட்டக்கூடிய இடத்தில் இறுதிச்சடங்குகளை நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நினைவிடம் கட்டும் இடத்தில் இறுதிச்சடங்குகளை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நேற்று பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் கார்கே பேசியுள்ளார். அதை தொடர்ந்து முறைப்படி மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,’ இரண்டு முறை நாட்டு மக்களால் போற்றப்படும் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிற்கு நினைவிடம் அமைப்பது குறித்து நமது தொலைபேசி உரையாடல் அடிப்படையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். மன்மோகன்சிங்கின் இறுதிச்சடங்குகளை, அவரது இறுதி இளைப்பாறும் இடத்தில், இந்தியாவின் மகத்தான மகனின் நினைவாக நினைவிடம் கட்டக்கூடிய இடத்தில் நடத்த வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். எனது கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன்’ என்று கார்கே தனது இரண்டு பக்க கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

The post முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங்குக்கு தலைவர்கள் அஞ்சலி: மோடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை, முழு அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம் appeared first on Dinakaran.

Related Stories: