×

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாக தரத்தை உயர்த்த கோரிக்கை


திருப்போரூர்: சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோயில் உள்ளது. 17ம் நூற்றாண்டில் சிதம்பர சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில் ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலின் 14வது ஆதீனமான சிதம்பர சிவஞான சுவாமி கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் சித்தியடைந்தார். அவருக்கு பிறகு புதிய ஆதீனம் நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தற்போதுவரை கோயில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அளவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கோயிலுக்கு சொந்தமாக திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், வாலாஜாபாத், தண்டலம், ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், இடையன்குப்பம், செங்காடு, சந்தனாம்பட்டு, பொன்மார், பஞ்சந்தீர்த்தி, மடையத்தூர், காட்டூர், கடம்பூர், பூண்டி, ஓங்கூர், ஆத்தூர், கீழுர், வெண்பாக்கம் ஆகிய 18 கிராமங்களில் 616 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இதுபோல் சென்னையில் மயிலாப்பூர், மண்ணடி, திருவல்லிக்கேணி, சௌகார்பேட்டை ஆகிய இடங்களிலும் 4000 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் உள்ளன. கோயிலில் முடி காணிக்கை, பிரசாத கடை விற்பனை, வாகன நிறுத்தம், கழிப்பறை, நெய் தீபம் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஏலம்விடப்பட்டு அவற்றின் மூலம் ஆண்டிற்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாயும், நிலக்குத்தகை மற்றும் கட்டிட வாடகை மூலம் ஆண்டிற்கு 60 லட்சம் ரூபாயும், உண்டியல் காணிக்கை மூலம் 2.5 கோடி ரூபாயும் என 1 ஆண்டிற்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் உள்ள கோயில்களை உதவி ஆணையர் பராமரிப்பின் கீழ் கொண்டு வந்து நிர்வகிக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் ஆண்டிற்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வரும் திருப்போரூர் கோயிலில் தற்போதுவரை செயல் அலுவலர் நிலையில் இருந்து உதவி ஆணையர் நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும். அப்படி செய்தால் பல்வேறு முக்கிய முடிவுகளை உதவி ஆணையரே எடுத்து செயல்படுத்த முடியும். இதன் மூலம் நிர்வாக பணிகள் எளிதில் நிறைவேற்றப்படும் வாய்ப்பு கிடைக்கும். கோயில் மற்றும் அதை சார்ந்துள்ள பணிகள் வேகமெடுக்கும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே, இந்து சமய அறநிலையத்துைற திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தின் தரத்தை செயல் அலுவலர் அளவில் இருந்து உதவி ஆணையர் தரத்திற்கு உயர்த்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

The post திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாக தரத்தை உயர்த்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruporur Kandaswamy Temple Administration ,Thiruporur ,Kandaswamy ,Temple ,Chennai ,Chidambara Swami ,Atheena ,Hindu Religious Endowments Department ,Chidambara Sivagnana Swami ,
× RELATED திருப்போரூர் இள்ளலூர் சாலையில் இயங்கும் மதுக்கடை இடம் மாற்ற கோரிக்கை