டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு 9.51 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலிக்கு பின் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு அறிவிப்பை தொடர்ந்து ஒன்றிய அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும். அதேவேளை, மன்மோகன் சிங் மறைவையொட்டி பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இன்று காலை முதல் குடியரசு தலைவர் மாளிகை, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகம், ஒன்றிய, மாநில அரசுகளின் அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து மன்மோகன் சிங்கின் இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடி மன்மோகன் சிங் உடலுக்கு மரியாதை ெசலுத்தினார். மேலும் குடும்பத்தினரிடம் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,
ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி. கனிமொழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்! appeared first on Dinakaran.