தொடர் மழையால் கண்மாய் உடைந்து வெள்ளநீர் புகுந்து நெல் சாகுபடி பாதிப்பு

*திருச்சுழி, வத்திராயிருப்பு விவசாயிகள் கவலை

திருச்சுழி/வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பகுதியில் மழைக்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாய்ந்த நெற்கதிர்களை நிமிர்த்து பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாப்பட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. குறிப்பாக இப்பகுதியில் நெல் விவசாயம் பிரதானமாக உள்ளது. நடப்பாண்டில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

நெற்கதிர் விளைந்து அறுவடைக்கு தயாராகும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வயல்களில் தேங்கிய மழைநீரில், குலை தாங்கமல் நெற்கதிர்கள் சாய்ந்தன.

இந்நிலையில், வயலில் சாய்ந்து கிடந்த நெற்கதிர்களை நிமிர்த்தி பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அறுவடை நேரத்தில் நெற்கதிர்கள் சாய்ந்து முளைவிட தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

* நரிக்குடி அருகே உள்ள வடக்கூர் கண்மாய் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்கண்மாய் மூலம் சிவகங்கை மாவட்டம் செங்குளம் கிராமத்தில் பகுதியில் வசிக்கும் சுமார் 250 குடும்பத்தினர் விவசாயத்தை நம்பி உள்ளனர். வடக்கூர் கண்மாய் மூலம் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் நீர் பாசனத்தால் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

மேலும் கடந்த சில 15 தினங்களுக்கு முன்பு திருச்சுழி, நரிக்குடி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகமாகி பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் வடக்கூர் கண்மாயும் நீர் நிரம்பிய நிலையில் சில நாட்களுக்கு முன்பு வடக்கூர் கண்மாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் கண்மாய்க்கு அருகிலுள்ள செங்குளம் கிராமத்து விவசாயிகள் பயிர் செய்துள்ள விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்துள்ள நெல் பயிர்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி வீணாகியது.

மேலும் விவசாயிகள் ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை கடன்களை வாங்கி செலவுகள் செய்து விவசாயம் செய்துள்ளனர்.

இந்நிலையில் சரியாக பராமரிக்கப்படாத வடக்கூர் கண்மாய் கரைகளில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால் செங்குளம் கிராம விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 நாட்களாக தண்ணீர் வீணாகி வரும் நிலையில் மணல் மூட்டைகள் அடுக்கி தற்போது தற்காலிகமாக கரைகள் போடப்பட்டுள்ளன.

இருப்பினும் கண்மாய் நீர் வெளியேறி விளைநிலங்களுக்குள் பாய்ந்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதற்கு உரிய இழப்பீடு தொகையை நிவாரணமாக வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தொடர் மழையால் கண்மாய் உடைந்து வெள்ளநீர் புகுந்து நெல் சாகுபடி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: