×

கூடலூர் மக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் யானை பிடிபட்டது: மயக்க ஊசி போட்டு பிடித்தது வனத்துறை!

நீலகிரி: கூடலூர் மக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் என்ற காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் சேரம்பாடி வனச்சரகம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ‘புல்லட்’ யானையை கடந்த ஒரு வாரமாக வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சேரம்பாடி, பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட சேரங்கோடு, டேன்டீ, சிங்கோனா, நர்சரி, படச்சேரி, சேரங்கோடு பஜார், தட்டாம்பாறை, அய்யன்கொல்லி, மூலைக்கடை உள்ளிட்ட பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதம் செய்த புல்லட் யானை, விவசாய பயிர்களை சேதம் செய்வதோடு, கண்ணில் பட்ட வாகனங்களை தாக்குவது, பொதுமக்களை ஆக்ரோஷமாக துரத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அட்டகாச மானையை வனத்துறையினர் 75 வனப்பணியாளர்களை வைத்து 5 குழுக்களாக பிரிந்து ட்ரோன் கேமரா வைத்து பதுங்கி இருக்கும் இடத்தை கணடறிந்து கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை முறையாக இருக்காது, யானை மீண்டும் குடியிருப்புக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்தும். எனவே, மயக்க ஊசி செலுத்தி பிடித்து தெப்பக்காடு முகாமிற்கு யானையை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வந்த உத்தரவை அடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு தலைமையில் கால்நடை மருத்துவர்கள் கலைவாணன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் புல்லட் யானை இருக்கும் இடத்தை ட்ரோன் கேமரா வைத்து கண்காணித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே யானை சுற்றி திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் இன்று ‘புல்லட்’ யானைக்கு மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். யானை மயக்க நிலையை அடைந்த பிறகு, அதன் 4 கால்களையும் கயிறு மூலம் கட்டி வைத்துள்ளனர். இந்த யானையை கும்கி உதவியுடன் லாரியில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். புல்லட் யானை பிடிபட்டதால் கூடலூர், பந்தலூர் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

The post கூடலூர் மக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் யானை பிடிபட்டது: மயக்க ஊசி போட்டு பிடித்தது வனத்துறை! appeared first on Dinakaran.

Tags : Koodalur ,Nilgiri ,NEILAGRI DISTRICT KOODALUR FOREST PARK ,
× RELATED புல்லட் ராஜா யானைக்கு மயக்க ஊசி...