×

மக்களின் தேவைக்கேற்ப முதலமைச்சர் நலதிட்டங்களை அறிவித்து பூர்த்தி செய்து வருகிறார்

திருமயம்,டிச.27: திருமயம் புதிய ஒன்றிய அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்த நிலையில் அமைச்சர் ரகுபதி கட்டிடத்தை பார்வையிட்டார். அப்போது, மக்களின் தேவைக்கேற்ப தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவிப்பதுடன் நின்று விடாமல் செயல் வடிவம் அளித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமைச்சர் ரகுபதி பெருமிதம் கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றிய அலுவலக கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை எழுந்து வந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழிகாட்டுதலின்படி கடந்த ஒரு வருடங்களாக பழைய ஒன்றிய அலுவலக கட்டிடம் பின்புறம் புதிய ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இதனிடையே பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் கடந்த 23ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திருமயம் ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

ஒன்றிய அலுவலக கட்டிடமானது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ரூ.3.57 கோடி மதிப்பில் 1610.36 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது. மேலும் புதிய ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் ஒன்றிய குழு தலைவர் அறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறை, கவுன்சிலர்கள் கலந்தாய்வு அறை, கலந்தாய்வு கூட்ட அரங்கம், கணினி அறை, அலுவலர்கள் அறை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது.

இதனிடையே திறப்பு விழாவிற்கு பின்னர் நேற்று முன்தினம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய ஒன்றிய அலுவலக கட்டிடத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது கட்டிடத்தின் ஒவ்வொரு அறையாக சென்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மக்களின் தேவைக்கேற்ப தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவிப்பதுடன் நின்று விடாமல் செயல் வடிவம் அளித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமைச்சர் ரகுபதி பெருமிதம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் சிதம்பரம், கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், வெங்கடேசன், கலை மற்றும் இலக்கிய அணி மேகநாதன், பொறியாளர் அணி ராமசாமி, மாவட்ட பிரதிநிதிகள், துரைராஜா ரமேஷ், இளைஞர் அணி கோட்டூர் அருண் சேகர், விவசாய அணி சிவகுமார், ஊராட்சி தலைவர்கள் சிக்கந்தர், ராமசாமி, கரிகாலன், தொண்டரணி சாமி சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அரசு ஒப்பந்ததாரர் சீமானூர் கணேசன் நன்றி தெரிவித்தார்.

The post மக்களின் தேவைக்கேற்ப முதலமைச்சர் நலதிட்டங்களை அறிவித்து பூர்த்தி செய்து வருகிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Thirumayam ,Minister ,Raghupathi ,Union Office ,Tamil Nadu ,Tamil Nadu Government ,
× RELATED ரசிகர்களை கட்டுபடுத்தி வைக்க...