×

கெஜ்ரிவாலை தேசவிரோதி என்று விமர்சிப்பதா..? இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரசை வௌியேற்ற வேண்டும்: ஆம் ஆத்மி ஆவேசம்

புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலை தேசவிரோதி என்று சொன்ன அஜய் மக்கான் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரசை வௌியேற்ற வேண்டும் என ஆம் ஆத்மி ஆவேசமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து டெல்லி பேரவை தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்தனியே போட்டியிடுகின்றன. இதனால் டெல்லி பேரவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கான் ஆம் ஆத்மி, பாஜவுக்கு எதிராக வௌ்ளை அறிக்கை வௌியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜய் மக்கான், “நாட்டிலேயே யாராவது ஒரு மோசடி மன்னன் இருக்கிறார் என்றால் அது கெஜ்ரிவால்தான். அதனால்தான் டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும், பாஜவுக்கும் எதிராக வௌ்ளை அறிக்கை வௌியிட்டுள்ளோம்” என காட்டமாக தெரிவித்திருந்தார். அஜய் மக்கானின் பேச்சு தற்போது சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அடிசி மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, “டெல்லி பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்தீப் தீட்சித் மற்றும் பர்ஹாத் சூரி போன்ற சில காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பாஜ ஆதரவு இருப்பது தௌிவாகிறது. காங்கிரசின் வேட்பாளர்கள் பட்டியல் பாஜ அலுவலகத்தில் இறுதி செய்யப்பட்டது போல் உள்ளது. டெல்லி பேரவை தேர்தலில் காங்கிரஸ் பாஜவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.

மேலும், “காங்கிரஸ் தலைவர்களான அஜய் மக்கான், சந்தீப் தீட்சித் ஆகியோர் பாஜ அரசின் குறைகளை பற்றி பேசாமல் ஆம் ஆத்மியை தாக்கி உள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலை தேசவிரோதி என சொன்னதன் மூலம் அஜய் மக்கான் எல்லா வரம்புகளையும் தாண்டி விட்டார். கடந்த தேர்தல்களில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்திருந்தாலும் கெஜ்ரிவால் மீது இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்தவொரு பாஜ தலைவர் மீதும் காங்கிரஸ் வழக்குப் பதிவு செய்யவில்லை” என்று தெரிவித்தனர்.

டெல்லி முதல்வர் அடிசி கூறியதாவது, “ஆம் ஆத்மியை காங்கிரஸ் குறைத்து மதிப்பிடுகிறது. கெஜ்ரிவாலை தேசவிரோதி என்று சொன்ன அஜய் மக்கான் மீது 24 மணி நேரத்துக்குள் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரசை வௌியேற்றும்படி மற்ற கட்சிகளை ஆம் ஆத்மி வலியுறுத்தும்” என இவ்வாறு தெரிவித்தார்.

The post கெஜ்ரிவாலை தேசவிரோதி என்று விமர்சிப்பதா..? இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரசை வௌியேற்ற வேண்டும்: ஆம் ஆத்மி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,India ,Congress ,Aam Aadmi Party ,New Delhi ,Ajay Maken ,Arvind Kejriwal ,Delhi ,
× RELATED அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு...