விஜயகரிசல்குளம் அகழாய்வில் சிகை அலங்கார மனித தலை கண்டெடுப்பு

விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளம் அகழாய்வில் சிகை அலங்காரத்துடன் கூடிய மனித தலை கிடைத்துள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை-விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டேன்.

அகழாய்வில், இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவைகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது சுடுமண்ணாலான சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்ட சிகை அலங்காரத்துடன் கூடிய மனிதனின் தலை கிடைத்துள்ளது.

மேலும், சூதுபவள மணிகள், மாவுக் கற்களால் செய்யப்பட்ட உருண்டை-நீள்வட்ட வடிவ மணிகள், அரிய வகை செவ்வந்திக் கல்மணிகள் கிடைத்துள்ளன. மேலும், சுடுமண்ணாலான பல வடிவமுடைய ஆட்டக் காய்கள், திமில் உள்ள காளையின் தலை முதல் முன்கால் பகுதி வரை கிடைத்துள்ளது. இவைகள் பண்டைய தமிழர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தை பறைசாற்றுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post விஜயகரிசல்குளம் அகழாய்வில் சிகை அலங்கார மனித தலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: