×

பந்தலூரில் குடியிருப்புகளை சேதப்படுத்திய புல்லட் யானையை பிடிக்க வலியுறுத்தல்: அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்

நீலகிரி: பந்தலூரில் குடியிருப்புகளை சேதப்படுத்தி தொடர்ந்து அச்சுறுத்திவரும் புல்லட் காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக புல்லட் என்று பெயரிடப்பட்டுள்ள காட்டுயானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 35க்கு மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியுள்ள புல்லட் காட்டு யானை நள்ளிரவு 2 மணி அளவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்தது.

அப்போது அங்கிருந்த 2 வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து வீட்டிற்குள் இருந்த அரிசி மற்றும் உணவு பொருட்களை யானை சூறையாடியது. யானையின் திடீர் தாக்குதலால் அச்சமடைந்த பகுதி மக்கள் உயிர்பிழைக்க அக்கம், பக்கம் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். குடியிருப்புகளை குறிவைத்து தாக்கிவரும் புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேளைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேரப்பாடி, கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள புல்லட் காட்டு யானையை விரட்டும் பணியில் 75க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் டிரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டம் கண்காணிக்கபட்டு வருகிறது. ஆனால் வனத்துறையினரின் பாதுகாப்புகளை தாண்டி புல்லட் யானை குடியிருப்புகளை தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக புல்லட் காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

The post பந்தலூரில் குடியிருப்புகளை சேதப்படுத்திய புல்லட் யானையை பிடிக்க வலியுறுத்தல்: அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Nilgiris ,Dinakaran ,
× RELATED புல்லட் யானையிடம் இருந்து தப்பிக்க...