சென்னை: சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் மொத்தத்தையும் அர்ப்பணித்தவர் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் ராமசாமி-கருப்பாயி தம்பதிக்கு 26.12.1925 அன்று 3வது குழந்தையாக நல்லகண்ணு பிறந்தார். கல்லூரியில் படிக்கிறபோது தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் மேடை முழக்கங்களும், அவருடைய வாழ்க்கை முறையும் நல்லகண்ணுவைப் பற்றிக் கொண்டது. அன்று கடைப்பிடிக்கத் தொடங்கிய எளிமைப் பண்பு நல்லகண்ணு இன்று 100-வது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் போதும் தொடர்வது அவருடைய சிறப்பாகும். முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இத்தகைய நூற்றாண்டு விழாவில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,
நூறாண்டு காணும் தொண்டு.
எல்லோரும் சமமென்னும் காலம் வரவேண்டும்; நல்லோர் பெரியர் என்னும் காலம் வரவேண்டும் என்பது பாரதியின் கனவு. அதன் நனவான வடிவமே மாபெரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் வாழ்வு.
சமூகத்தில் சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் மொத்தத்தையும் அர்ப்பணித்து, அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார் ஐயா.
இப்படி ஒருவர் இருக்க இயலுமா என்று வியக்கும் வண்ணம் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பெருந்தகை தோழர் நல்லகண்ணு எளியோரின் வாழ்த்துப்படி நூறாண்டு காண்கிறார். அவருக்கு என் வாழ்த்து. இவ்வாறு தெரிவித்தார்.
The post சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் மொத்தத்தையும் அர்ப்பணித்தவர்: நல்லகண்ணுவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.