சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஜரிகை சேலை உற்பத்தி தீவிரம்: ஆந்திரா, கர்நாடகாவுக்கு அனுப்புவதாக தகவல்

சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஜரிகை சேலைகளின் உற்பத்தி தீவிரமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவத்தனர். தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, காங்கேயம், சென்னிமலை, திருப்பூர், ஈரோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்பட பல பகுதிகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இங்கு ஷாப்ட் சில்க், சுபமுகூர்த்த பட்டு, காட்டன் ஷாப்ட் சில்க், கரீஷ்மா, அபூர்வா, சாமுத்திரிகா பட்டு, கோட்டா காட்டன் பட்டு, மோனா காட்டன், மல்டி கலர் சேலை, எம்போஸ், பிக்கன் பிக் என்று பல்வேறு ரகங்களில் சேலைகள் உற்பத்தி செயய்யப்படுகிறது. இந்த சேலைகள் அனைத்தும் பாலியஸ்டர், கோல்டுஜரிகை, சில்வர்ஜரிகை, காப்பர்ஜரிகை, புளோரா ஜரிகையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஜரிகை ரகங்களை கொண்டு நெய்யப்படும் சேலைகள் பட்டுப்புடவைகளை விஞ்சும் அளவுக்கு பளபளக்கிறது. இங்கு அபூர்வா ஜரிகை சேலையோடு சில்க் காட்டன், காட்டன் சேலை, டவல், கேரளா சேலை, வேஷ்டி, லுங்கி, காடா உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரகங்களும் இந்தியாவில் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜரிகை சேலைகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இளம்பிள்ளை, ஜாரிகொண்டலாம்பட்டி, சிந்தாமணியூர் உள்பட பல பகுதிகளில் ஜரிகை சேலைகளின் உற்பத்தியை விசைத்தறியாளர்கள் அதிகப்படுத்தியுள்ளனர். இது குறித்து இளம்பிள்ளையை சேர்ந்த ஜரிகை சேலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தமிழகத்திலேயே ஜரிகை சேலைக்கு சேலம் இளம்பிள்ளைதான் பெயர் பெற்ற இடமாகும். இளம்பிள்ளை சுற்றியுள்ள இடங்கணச்சாலை, வேம்படிதாளம், அரியானூர், சீரகாபாடி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், ஓமலூர், எட்டுக்குட்டைமேடு உள்பட பல பகுதிகளில் விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜரிகை சேலைகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு அதிகளவில் செல்கிறது. மேலும் அமெரிக்கா, சிங்காப்பூர், மலேசியா, துபாய் உள்பட தமிழர்கள் வசிக்கும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால் இளம்பிள்ளையில் ஆண்டு முழுவதும் ஜரிகை சேலை உற்பத்தி இருந்து கொண்டே இருக்கும். இளம்பிள்ளை அடுத்தபடியாக ஜாரிகொண்டலாம்பட்டி, சிந்தாமணியூர் சுற்று வட்டார பகுதியில் ஒரிஜினல் பட்டு சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின்போது ஜரிகை சேலைகளின் விற்பனை களைகட்டும். தமிழகத்தில் பொங்கல் பண்டிகைபோல் ஆந்திரா, கர்நாடகாவில் மகாசங்கராந்தி விழாவும் கொண்டாட்டப்படும். இப்பண்டிகையின்போது அங்கும் பெண்கள் அதிகளவில் ஜரிகை சேலை அணிவது வழக்கம். இதனால் ஜரிகை சேலைகளின் தேவை அதிகரித்துள்ளது. தினசரி உற்பத்தி செய்யப்படும் ஜரிகை சேலைகளை அவ்வப்போது விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். வழக்கமாக நடக்கும் உற்பத்தியை காட்டிலும் 30 சதவீதம் அதிகரித்துள்ளோம். ஒரு ஜரிகை சேலை ₹500 முதல் ₹5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

 

The post சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஜரிகை சேலை உற்பத்தி தீவிரம்: ஆந்திரா, கர்நாடகாவுக்கு அனுப்புவதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: