×

‘’சூரிய உதயத்தின்போது உன் முக அழகை ரசிக்கவேண்டும்’’தங்கியிருந்த அறைக்கு வரவழைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர்: காமக்கொடூர வாலிபர் கைது


சென்னை: மேட்ரிமோனி மூலம் அறிமுகமான இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறியதுடன் சூரிய உதயத்தின் போது உன் முகத்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்து அறைக்கு அழைத்துச்சென்று இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை கைது செய்துள்ளனர். சென்னை மணலி சின்ன மாத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயது ெபண் ஒருவர் பிரபல மேட்ரிமோனியில் தனது வருங்கால கணவரை தேடும் வகையில் முகவரி, செல்போன் எண்களை பதிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த 18ம்தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கிழக்கு மாட வீதியை சேர்ந்த பூர்ணநாதன்(28) என்பவர் இளம்பெண்ணின் செல்போனில் தொடர்புகொண்டு, ‘’நான் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். உங்களை எனக்கு பிடித்து இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண், ‘’வரன் தொடர்பாக தனது தாயிடம் பேசும்படி தெரிவித்து அவரது போன் நம்பரை கொடுத்துள்ளார். இதன்பிறகு அந்த நபர் பேசி, ‘’உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுங்கள்’ என்று கேட்டுள்ளார். இதையடுத்து இளம்பெண்ணின் தாய், ‘’உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களை நேரில் வந்து எனது மகளை பெண் பார்க்க அழைத்துவாருங்கள்’’ என்று தெரிவித்துள்ளார். இதனிடையே பூர்ணநாதன் அடிக்கடி இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிவந்துள்ளார். தனது வருங்கால கணவராக வரப்போகிறார் என்ற ஆர்வத்தில் இளம்பெண், பூர்ணநாதனிடம் மணிக்கணக்கில் பேசியுள்ளார். இதை பயன்படுத்திய பூர்ணநாதன், ‘’சூரிய உதயத்தின் போது உன் அழகான முகத்தை நான் பார்க்க வேண்டும்’ என்று அன்பாக கூறி மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது அறைக்கு அழைத்துள்ளார்.

இதை நம்பி இளம்பெண்ணும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு, தலை சீவி, பொட்டுவைத்து, 2 முழம் குண்டுமல்லி பூ சூடிக்கொண்டு கிளம்பி பூர்ணநாதன் அறைக்கு அதிகாலை 5.30 மணிக்கு வந்துள்ளார். இதன்பிறகு அறையில் இருந்து இருவரும் தங்களது எதிர்காலம் பற்றி பேசியுள்ளனர். அப்போது பூர்ணநாதன்,’’நாம்தான்திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே என்று தெரிவித்து திடீரென இளம்பெண்ணை கட்டியணைத்து முத்தம் கொடுத்ததுடன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த இளம் பெண், பூர்ணநாதனை கண்டித்தப்படி சத்தம்போட்டுக்கொண்டே வெளியே செல்ல முயன்றுள்ளார். ஆனால் அவரை மறித்து நிறுத்திய பூர்ணநாதன், ‘’இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருக்கவேண்டும் என கூறி கன்னத்தில் சரமாரியாக அறைந்ததுடன் இளம்பெண் அணிந்திருந்த 10 கிராம் செயினை பறித்து கொண்டார்.

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த இளம் பெண், தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதன்பிறகு வீட்டிற்கு வந்த இளம்பெண்ணிடம் அவரது தாய் 10 கிராம் செயின் எங்கே என்று கேட்டபோது மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த தாய், ‘’எங்கே செயின்? அதிகாலை எங்க சென்று வந்தாய்? என்று மிரட்டி கேட்டதால் தனக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்து அழுதுள்ளார். இதுசம்பந்தமாக இளம்பெண், குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் பூர்ணநாதனை பிடித்து விசாரணை நடத்தியபோது, மேட்ரிமோனி மூலம் அறிமுகமான இளம் பெண்ணுக்கு திருமணம் ஆசை வார்த்தை கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து 10 கிராம் செயின் பறித்தேன் என்று தெரிவித்தார். இதையடுத்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பூர்ணநாதனை கைது செய்து அவரிடம் இருந்து 10 கிராம் செயினை கைப்பற்றினர்.

The post ‘’சூரிய உதயத்தின்போது உன் முக அழகை ரசிக்கவேண்டும்’’தங்கியிருந்த அறைக்கு வரவழைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர்: காமக்கொடூர வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Manali Chinna Mathur ,Dinakaran ,
× RELATED குப்பை கழிவுகளை வீசுவதை தடுக்க...