செங்கல்பட்டு: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வரும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சை பேச்சை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் புகைப்படத்துடன் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டை குறிக்கும் விதத்தில் மாநிலங்களவையில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை சொல்வது இப்போது பேஷன் ஆகிவிட்டதாகவும் அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திற்கு செல்ல உதவியாக இருக்கும் என்று கேலியாக விமர்சித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தியும், அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வரும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
பரனூர் சுங்கசாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய ஆர்பாட்டம் காரணமாக பரனூரில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குன்றத்தூர்: அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, குன்றத்தூர் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, நாடு முழுவதும் திமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தினமும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
அதன்படி, குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகளத்தூர் ஊராட்சி திமுக சார்பில், சிறுகளத்தூர் பிரதான சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அமித் ஷாவின் உருவ பொம்மையை எரிப்பதற்காக மேடைக்கு சென்றபோது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர். இருப்பினும், அவர்கள் எரிக்க முயன்ற நிலையில் போலீசார் விடாமல் உருவ பொம்மையை பறிமுதல் செய்து, அவர்களை போலீஸ் வேனில் ஏற்றினர்.
பொதுவாக கைது செய்யப்பட்ட நபர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றுவதுபோல், அமித்ஷாவின் உருவ பொம்மையை கைது செய்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போலீசார் சென்றது நகைப்பிற்குரியதாக இருந்தது. இச்சம்பவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக, விசிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.