கடலூர் : அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்கிட தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயலாற்றிட வேண்டும் என வட்டார அளவிலான கலந்தாய்வு கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது குறித்து நல்லூர், மங்களூர், விருத்தாசலம், கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டார அளவிலான ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியர் சி பி ஆதித்யா செந்தில்குமார் கலந்தாய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி உயர்தரமான கல்வியை பயில வேண்டும் என்பதற்காகவும், மாணாக்கர்கள் கல்வி கற்பதற்கான சிறந்த சூழ்நிலைகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காகவும் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தியுள்ளார். நல்லூர், மங்களூர், விருத்தாசலம், கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டாரங்களில் உள்ள 26 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,049 மாணவர்கள், 2,266 மாணவிகளும் என மொத்தம் 4,315 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளிகளில் பயிற்றுவிக்கும் 135 ஆசிரியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசு பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் கல்வியின் தரத்தினை பரிசோதிக்கவும் மற்றும் மேம்படுத்துவதற்கான தேர்வு ஆகும். இதனை மாணவர்கள் எவ்வித தயக்கமுமின்றி முழுத்திறனுடன் எதிர்கொள்வதற்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பறியதாகும். மாணவர்களின் திறனை கண்டறிந்து அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்வது முக்கிய பொறுப்பாகும்.
மாணாக்கர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்திட பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி வகுப்பு, மாணாக்கர்களின் உடல்நலன் குறித்து அறிந்து பயிற்றுவித்தல், மாணாக்கர்களின் குடும்ப சூழ்நிலையறிந்து பயில்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருதல் வேண்டும்.
மாணவர்களுக்கு ஊக்கப்பயிற்சி அளித்து தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக அவர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடத்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டும்.
மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்றலுக்கு தேவையான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்கிட தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயலாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் துரைப்பாண்டி, கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்கிட தமிழக அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக செயலாற்ற வேண்டும் appeared first on Dinakaran.