அண்ணா பல்கலை பாலியல் வன்முறை சம்பவம் கமிஷனர் பேட்டி அளித்ததில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, சென்னை காவல் துறை ஆணையர் பேட்டி அளித்ததில் தவறு ஏதும் இல்லை. அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 1968-ன்படி கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் பேட்டியளிக்கலாம் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, சென்னை பெருநகர காவல் துறை துரிதமாக உரிய நடவடிக்கைகளை எடுத்து குற்றவாளியை கைது செய்தது குறித்தும், இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மாண்பமை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளவாறு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு, இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, இவ்வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை பொது வெளியில் வெளிவந்ததற்கு, இந்த அறிக்கைகளை இணைய வழியில் நிர்வகிக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்ஐசி) சி.சி.டி.என்.எஸ் அமைப்பில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளே காரணம் என்பதும், காவல்துறை காரணம் அல்ல என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில், சென்னை காவல்துறை ஆணையரின் பேட்டி பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பொறுத்தவரை, அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 1968-ன்படி கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளின் அடிப்படையில், இதில் எந்த தவறும் இல்லை எனத் தெளிவுபடுத்த உள்ளோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post அண்ணா பல்கலை பாலியல் வன்முறை சம்பவம் கமிஷனர் பேட்டி அளித்ததில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: