சமீபகாலமாக காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்திருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து வெளிவந்த யானைகள் கூட்டம், மேலவடகரையில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து, அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்களை சாய்த்து, அவைகளை தின்றுள்ளன. இதில் 1,300க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளன. இவைகள் 5 மாதமான ஏத்தன், தொழுவன் வகைகளை சேர்ந்த வாழைகள் ஆகும்.
சேதமடைந்த வாழைகள் மேலவடகரையை சேர்ந்த சாமி மகன் முருகன் (53), முத்தையா மகன் முருகன் (55) ஆகியோருக்கு சொந்தமானது ஆகும். இதனால் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக யானைகள் சேரன்மகாதேவி- களக்காடு பிரதான சாலை அருகே உள்ள களக்காடு தோப்புத்தெருவை சேர்ந்த லட்சுமணகுமார் (44) என்பவருக்கு சொந்தமான ஆட்டு பண்ணைக்குள் வேலிகளை உடைத்து உள்ளே சென்று, பண்ணையில் பயிர் செய்யப்பட்டிருந்த ஆட்டு தீவன பயிர்களை முழுவதுமாக தின்றுள்ளது.
தண்ணீர் குழாய்களையும் உடைத்து நாசம் செய்துள்ளன. இதனால் அவருக்கு ரூ.60 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். நேற்று காலை விளைநிலங்களுக்கு சென்ற விவசாயிகள், யானைகள் அட்டகாசம் செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், நாசமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post களக்காடு அருகே விளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்: ரூ.5 லட்சம் வாழைகள், ஆட்டு தீவனங்கள் நாசம் appeared first on Dinakaran.