சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் திவ்யா(32). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ராம்குமார்(34) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது 4 வயதில் லக்சன் குமார் மற்றும் ஒன்றரை வயதில் புனித்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேநேரம் திவ்யா அடிக்கடி பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்களில் அதிக நேரம் கவனம் செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கணவன் ராம்குமாரை பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் திவ்யா கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அதன் பிறகு நேற்று ராம்குமார் தனது மனைவியை குடும்ப நடத்த செல்போன் மூலம் திவ்யாவை தொடர்பு கொண்டு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இனி உன்னுடன் குடும்ப நடத்த முடியாது என்று பிடிவாதமாக கூறிவிட்டார். அதற்கு ராம்குமார் திவ்யாவின் நடத்தை குறித்து தவறாக பேசியபடி இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது திவ்யா தனது 2 மகன்களுடன் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த திவ்யா தனது பெற்றோர் வீட்டில் இல்லாததை கவனத்தில் கொண்டு, சமையல் அறையில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து ஒன்றரை வயது உள்ள இளைய மகன் புனித்குமாரை வீட்டின் கழிவறைக்கு அழைத்து வந்து தனது கணவர் மீதுள்ள கோபகத்தில் கழுத்தை கொடூரமாக அறுத்து துடிக்க துடிக்க கொன்றார். அதோடு இல்லாமல் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற திவ்யா தனது மூத்த மகன் லக்சன் குமாரையும் வீட்டின் படுக்கை அறையில் இருந்து தரதரவென இழுத்து வந்து, இளையமகனை கொன்றது போல், லக்சன் கழுத்தையும் திவ்யா அறுத்துள்ளார். அப்போது லக்சன் குமார் வலி தங்க முடியாமல் அலறினார்.
அந்த நேரத்தில் திவ்யாவின் அத்தை பத்மாவதி குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு சந்தேகமடைந்து வீட்டிற்கு ஓடி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள் பக்கமாக தாழ்ழிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பத்பாவதி ஏதோ விபரீதம் நடந்துள்ளதை உணர்ந்த அவர், வீட்டின் கதவை பலமாக தட்டி திவ்யாவை சத்தம் போட்டார். இதை பார்த்து அருகில் வசித்தவர்களும் ஓடி வந்து கதவை தட்டினர். அப்போது திவ்யா மூத்த மகனின் கழுத்தை அறுத்து கொண்டிருந்தார். வீட்டின் கதவு பலமாக தட்டும் சத்தம் கேட்டு திவ்யா செய்வது அறியாமல் தனது மகனை அறுத்த அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக்ெகாண்ட நிலையில் ரத்த வடிந்தப்படி பதற்றத்துடன் திவ்யா கதவை திறந்தார். அப்போது கதவை தட்டிய அவரது அத்தை பத்மாவதி மற்றும் அருகில் இருந்தவர்கள், அதிர்ச்சியில் உறைந்து குழந்தைகளுக்கு என்னஆனது என்று ஓடி சென்று பார்த்த போது, மூத்த மகன் லக்சன் குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இளைய மகன் புனித்குமார் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அலறினர்.
உடனே கீழ்ப்பாக்கம் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். அதன்படி விரைந்து வந்த 108 அம்புலன்ஸ் ஊழியர்கள் உயிருக்கு போராடிய மூத்த மகன் லக்சன் குமார் மற்றும் அவரது தாய் திவ்யாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் கழிவறையில் இறந்து கிடந்த புனித்குமார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் கீழ்ப்பாக்கம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அதேநேரம் கீழ்ப்பாக்கம் போலீசார் மகனை கொலை செய்த திவ்யாவிடம் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால் அவர் கழுத்து அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அவரால் பேச முடியாத நிலை இருந்தது. உடனே போலீசார் திவ்யா தங்கி இருந்த வீட்டை ஆய்வு செய்த போது, அதில் கடிதம் ஒன்று இருந்தது, அந்த கடிதத்தில் திவ்யா‘ எனது உடல் நிலையில் பிரச்னைஉள்ளது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். நான் இறந்தால் எனது 2 குழந்தைகளும் அனாதையாக நிற்பார்கள். எனவே என்னுடனே அவர்களையும் அழைத்து செல்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா’ என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் போலீசார் திவ்யா மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, திவ்யா கணவர் ராம்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மூத்த மகன் லக்சன் குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திவ்யா சிறு காயங்களுடன் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். எனவே திவ்யாவை போலீசார் சிகிச்சைக்கு பிறகு கொலை வழக்கில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதனால் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திவ்யாவிக்கு கழுத்தில் பலமாக வெட்டு காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் சரியாக பேச முடியவில்லை. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடியாதநிலை உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தினால் தான், ஏன் குழந்தையை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து முழுமையாக தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் விபரீதம்; கீழ்ப்பாக்கத்தில் குழந்தை கழுத்து அறுத்து கொன்ற கொடூர தாய் மீது பாய்ந்தது கொலை வழக்கு appeared first on Dinakaran.