×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெய்வானை யானை ஒரு மாத காலத்திற்கு பிறகு உற்சாக குளியல்..!!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெய்வானை யானை ஒரு மாத காலத்திற்கு பிறகு உற்சாக குளியல் போட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த நவம்பர்.18ம் தேதி பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் யானை தெய்வானை தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்தது முதல் தற்போது வரை வனத்துறை, கால்நடை துறையின் தீவிர கண்காணிப்பிலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறையின் பாதுகாப்பிலும், பாகன்களின் அரவணைப்பிலும் யானை இருந்து வருகிறது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி பாகன்கள் யானையை கண்காணித்தும், உணவளித்தும் வருகின்றனர். பாகன்களின் கட்டளைக்கு வழக்கம்போல செவி சாய்க்கும் யானை, தற்போது உற்சாகமாக காணப்படுகிறது. அதனை வழக்கம்போல குடிலிலேயே வைத்து குளிப்பாட்டி, நவதானிய உணவுகள், மற்றும் பச்சை நாற்றுகளை பாகன்கள் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கி வருகின்றனர். கடந்த டிசம்பர் .6ம் தேதி மாவட்ட வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், யானையை பரிசோதனை செய்து இயல்பு நிலைக்கு முழுவதும் திரும்பி விட்டதால் நடைபயிற்சி செய்வதற்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து ஒரு மாதத்திற்குப்பிறகு கடந்த 18ம் தேதி தங்கும் குடிலில் யானைக்கு சிறப்பு கஜபூஜைகள் செய்து பாகன்கள் யானையை கோயில் பழைய கலையரங்கம் பின்புறமுள்ள யாத்ரி நிவாஸ் விடுதி வளாகத்தில் நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து காலையில் யானை நடைபயிற்சி செய்து வருகிறது. இந்நிலையில் யானை நீராடுவதற்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் ஒரு மாத காலத்திற்கு பிறகு யானை, உற்சாகமாக நீராடியது. முன்னதாக தொட்டியில் புதிதாக தண்ணீர் நிரப்பப்பட்டது. துதிக்கையால் தொட்டியில் கிடக்கும் நீரை உறிஞ்சி தன் மீது பீய்ச்சியடித்தும், தண்ணீரில் உற்சாகமாக குளித்தும் மகிழ்ந்தது.

 

The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெய்வானை யானை ஒரு மாத காலத்திற்கு பிறகு உற்சாக குளியல்..!! appeared first on Dinakaran.

Tags : Thiruchendur ,Swami Temple ,Subramanian Swami temple ,Tiruchendur ,Bagan Udayakumar ,Chisubalan ,Subramaniya Swami Temple ,Tiruchendur Subramaniya Swami Temple ,
× RELATED திருச்செந்தூரில் கடலில் அடிக்கடி...