*தளி பேரூராட்சி சார்பில் 9 படகுகளுக்கு டெண்டர்
உடுமலை : தளி பேரூராட்சி சார்பில் திருமூர்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி நடைபெற உள்ளது. இதற்காக 9 படகுகள் மற்றும் 40 லைப் ஜாக்கெட் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை அடிவாரத்தில் 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணை மூலம் பிஏபி பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
இந்த அணைக்கு பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக, காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பபடுகிறது. பஞ்சலிங்க அருவியில் வரும் தண்ணீரும் பாலாறு வழியாக அணையில் கலக்கிறது.மலையடிவாரத்தில் அமைந்தள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு தரிசனம் செய்ய தினசரி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
அமாவாசை, பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும்.திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோயில், காண்டூர் கால்வாய், வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம், பூங்கா என பல்வேறு பொழுதுபோக்கு இடங்கள் உள்ளதால் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். அணை பூங்கா பராமரிக்கப்படாமல் பூட்டிக்கிடக்கிறது. இதனை உரிய முறையில் பராமரித்து திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக உள்ளது.
பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்படும். அப்போது பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவார்கள். உள்ளுர் மக்கள் நீச்சல்குளத்தில் குளித்து செல்வார்கள்.
அணையை பார்வையிட்டு, சாலையோரம் அமர்ந்து சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கி செல்வது வழக்கம்.திருமூர்த்தி அணையில் முன்பு தளி பேரூராட்சி சார்பில் மலைவாழ் மக்களை கொண்டு படகு சவாரி நடத்தப்பட்டது. இதன்மூலம் மலைவாழ் மக்களுக்கு வருமானம் கிடைத்ததுடன், சுற்றுலா பயணிகளுக்கும் சிறந்த பொழுதுபோக்காக இருந்தது.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இயக்கப்பட்ட ஒரே ஒரு போட்டும் தற்போது துருப்பிடித்து கிடக்கிறது.இந்நிலையில், மீண்டும் படகு சவாரி நடத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தளி பேரூராட்சி சார்பில் புதிய படகுகள் வாங்க டெண்டர் விடப்பட்டது. கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனம் மிக குறைந்த தொகைக்கு ரூ.4 லட்சத்து 98 ஆயிரத்து 800க்கு டெண்டர் கேட்டதால், அந்த நிறுவனத்துக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு இருக்கைகள் கொண்ட பைபர் பெடல் போட் 3, நான்கு இருக்கைகள் கொண்ட பைபர் பெடல் போட் 2, நான்கு இருக்கைகள் கொண்ட போட் 4 என மொத்தம் 9 படகுகளும், 40 லைப் ஜாக்கெட்டுகளும் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் விரைவில் படகு சவாரி தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் திருமூர்த்திமலை வரும் சுற்றுலா பயணிகள் இனி மகிழ்ச்சியுடன் அணையில் படகு சவாரி செய்து மகிழலாம்.இதைத்தொடர்ந்து, அணை பகுதியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
The post திருமூர்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி தொடங்க முடிவு appeared first on Dinakaran.