முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்துக்கு மனித தவறே காரணம்

டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் மரணமடைய மனிதத் தவறே காரணம் என மக்களவையில் தாக்கலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் குன்னூரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார்.

கடந்த 2021 ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, கோவையில் இருந்து உதகைக்கு ஹெலிகாப்டரில் மனைவி மதுாலிகா உள்ளிட்ட 11 பேருடன் பிபின் ராவத் சென்றபோது, குன்னூர் அருகே மலை மீது மோதி விபத்தில் சிக்கியதில் அனைவரும் உயிரிழந்தனர். நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதி விபத்தில் இறந்தது சர்ச்சையான நிலையில், விமானப்படை விபத்துகள் தொடர்பாக விசாரிக்கும் பாதுகாப்புத் துறை நிலைக்குழு இதையும் ஆய்வு செய்யத் தொடங்கியது.

2017 முதல் 2022 வரையிலான அந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 5 ஆண்டுகளில் விமானப்படை தொடர்புடைய 34 விபத்துகள் நிகழ்ந்ததாகவும், பிபின் ராவத் உயிரிழந்தது, ஹெலிகாப்டரை இயக்கிய குழுவின் தவறே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதே விமானியின் பிழையால் விபத்து நடந்து இருக்கலாம் எனத் தகவல் வெளியான நிலையில், அதை உறுதி செய்வதாகவே இந்த அறிக்கை அமைந்துள்ளது

ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா உள்ளிட்டோரை ஏற்றிக்கொண்டு Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து ஊட்டி வெலிங்டனில் உள்ள டிபன்ஸ் ஸ்டாஃப் சர்வீஸ் காலேஜிற்கு சென்று கொண்டு இருந்தது. ஹெலிகாப்டர் தரையிறங்க சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அப்போது எதிர்பாராத விதமாக மலைப்பகுதியில் மோதி விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

The post முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்துக்கு மனித தவறே காரணம் appeared first on Dinakaran.

Related Stories: