டெல்லி: தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணையாக வகைப்படுத்துவதா அல்லது அழகு சாதனப் பொருட்களின் கீழ் வகைப்படுத்துவதா என்ற 20 ஆண்டு கால குழப்பத்திற்கு நீதிமன்றம் சுவாரசியமான தீர்வினை கண்டுள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அழகு சாதன தயாரிப்புகளுக்கான வரி 18% ஆகும். ஆனால் சமையலுக்காகவும், அழகு சாதன பொருளாகவும் தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்கப்படுவதால் அதனை எந்த ஜிஎஸ்டி அடுக்கில் பொருத்துவது என கலால் துறை மற்றும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே நீண்ட வாக்குவாதம் இருந்து வந்தது.
தேங்காய் எண்ணெய் தொடர்பான வழக்கின் விசாரணையும் 20 ஆண்டுகளாக தொடந்து வந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. உணவு பாதுகாப்பின் கீழ் உள்ள அளவுகோலை பூர்த்தி செய்யும் எண்ணெயை, சமையல் எண்ணையாக வகைப்படுத்தலாம் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேசம், சருமத்திற்கு பயன்படும் தேங்காய் எண்ணெயை மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சுத்தமான தேங்காய் எண்ணெய் வகைப்பாடு அதன் பிராண்டிங்கைப் பொறுத்தே அமையும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். பயன்பாடுகளை வேறுபடுத்த தேங்காய் எண்ணெய்கள் மீது இது உணவுக்கானது அல்லது அழகுசாதனப் பொருள் என்று தெளிவான குறியீட்டு லேபிளின் அவசியத்தையும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
The post தேங்காய் எண்ணெய் சமையல் பொருளா? அழகு சாதனப் பொருளா?: 20 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.