×

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ஈரோடு: மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா? என ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று களஆய்வு செய்து வருகிறார். அதன்படி, நாளை (வெள்ளி) ஈரோட்டில் களஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பீளமேடு விமான நிலையத்தில் முதல்வருக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து காரில் சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு மாவட்ட எல்லையான விஜயமங்கலத்தில் திமுக ஈரோடு தெற்கு-வடக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கி முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஒரு கோடி பயனாளி இருக்க வேண்டும் என்பது லட்சியமாகும். ஆனாலும் அதையும் தாண்டி இரட்டிப்பாகி உள்ளது. 2 கோடியாவது பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட உள்ளது. அதன்படி ஈரோட்டில் இன்று நடந்த விழாவில் 2 கோடியாவது பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார். இதைத்தொடர்ந்து ஈரோடு காளிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வந்தடைந்தார். மதிய உணவுக்கு பின் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று மாலை ஈரோடு மேட்டுக்கடை தங்கம் மகாலில் நடக்கும் திமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து ஈரோடு முத்து மகாலில் நடக்கும் திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரக்குமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். இதை முடித்துக்கொண்டு இரவு 7 மணிக்கு காளிங்கராயன் மாளிகைக்கு சென்று அங்கு தங்குகிறார்.

2ம் நாள் நிகழ்ச்சியாக ஈரோடு அடுத்த சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நாளை (20ம் தேதி) காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். முன்னதாக, ரூ.951.20 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 559 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், ரூ.133.66 கோடி மதிப்பிலான 222 புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து 50,088 பயனாளிகளுக்கு ரூ.284.02 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மேயர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், மற்றும் நலத்திட்ட பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

2,500 போலீசார் பாதுகாப்பு
முதல்வர் வருகையையொட்டி மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், டிஐஜி சரவணசுந்தர் ஆகியோர் தலைமையில் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த 2,480 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முதல்வர் வருகையையொட்டி ஈரோடு மாநகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

The post மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Repository ,Chief Minister ,Erotil K. ,Stalin ,Erode ,Chief Minister of ,Tamil ,Nadu ,K. ,Tamil Nadu ,Chief Mu. K. ,Drug Repository ,
× RELATED தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழை...