×

திருக்கழுக்குன்றம் அருகே ஆழ்துளை கிணறு பணியை தடுத்த 30 பெண்கள் கைது: போலீசார்-கிராம மக்களிடையே தள்ளுமுள்ளு; 5 பெண்கள் காயம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே இன்று காலை துவங்கிய பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை தடுத்த 30 பெண்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளாப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளாக பாறை துகள்களுடன் தண்ணீர் வருவதால் அப்பகுதி மக்கள் குடிக்க நீரின்றி பெரிதும் அவதிப்பட்டனர். இதனால், அங்குள்ள பாண்டூரில் உள்ள பாலாற்றில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கிளாப்பாக்கம் ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, பாண்டூரில் உள்ள பாலாற்றில் இருந்து கிளாப்பாக்கம் ஊராட்சிக்கு ₹20 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பாண்டூரில் உள்ள பாலாற்றில் கடந்த ஜனவரி மாதம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் துவங்கின. அதற்கு அப்பகுதி மக்கள், எங்கள் பகுதியிலும் குடிநீர் பிரச்னை உள்ளது. இதைத் தீர்த்துவிட்டு, கிளாப்பாக்கம் ஊராட்சிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை துவங்குங்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து, பணிகளைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் தாசில்தார் ராதா தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் உடன்பாடு ஏற்படாததால், 5 முறைக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை பாண்டூர் கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையே, கிளாப்பாக்கம் ஊராட்சி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கிளாப்பாக்கம் ஊராட்சி மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. கிளாப்பாக்கம் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைத்து, மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவும், அரசு நிதி ஒதுக்கிய திட்டத்தை நிறைவேற்ற மாவட்ட அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

இந்நிலையில், இன்று காலை மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி அபிராம், இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாண்டூர் பாலாற்று பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அங்கு தாசில்தார் ராதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனாட்சி, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் நவீன கருவிகள் மூலம் பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் துவங்கின. இதுகுறித்து தகவலறிந்ததும் 100க்கும் மேற்பட்ட பாண்டூர் கிராம மக்கள் அவ்வழியே துளையிடும் கருவிகள் கொண்டு வந்த வாகனங்களை தடுத்தும், அரசு பேருந்தை சிறைப்பிடிக்கவும் முயன்றனர். அவர்களை போலீசார் கலைக்க முயற்சித்தனர்.

இதனால் போலீசார் மற்றும் கிராம மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 5 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதைத் தொடர்ந்து, பாண்டூர் பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த முயன்றதாக 30க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post திருக்கழுக்குன்றம் அருகே ஆழ்துளை கிணறு பணியை தடுத்த 30 பெண்கள் கைது: போலீசார்-கிராம மக்களிடையே தள்ளுமுள்ளு; 5 பெண்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Thirukkazhukundram ,Palar ,Klapakkam ,Chengalpattu ,
× RELATED இன்ஸ்பெக்டர் கன்னத்தில் ‘பளார்’ தந்தை, மகன் கைது