விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே மந்திக்குளம் பாலம் மழையால் சேதமடைந்து இடிந்தது. இதையடுத்து அந்த பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். விளாத்திகுளம் வட்டாரத்தில் கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையினால் காடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைப்பாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. மேலும் விளாத்திகுளத்தை அடுத்துள்ள மீனாட்சிபுரம், குமாரபுரம் மேம்பாலங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் விளாத்திகுளம் அருகே உள்ள மந்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பாலம் சிறியது என்பதால் காட்டாற்று வெள்ளத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பாலத்தின் ஓரங்களில் மணல் அரிப்பு ஏற்பட்டு சிதிலமடைந்து இடிந்து விழுந்தது. இதனால் மந்திக்குளத்திலிருந்து செல்லும் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியதுடன் போக்குவரத்தின்றி பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து சேதமடைந்த பாலத்தை தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் ஆறுமுகநயினார் பாலத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழை நின்றவுடன் விரைவாக புதிய பாலம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிதிலமடைந்த சாலைகளும் சீரமைக்கப்படும் என கூறினார். விளாத்திகுளம் நெடுஞ்சாலை உட்கோட்டப்பொறியாளர் ராஜபாண்டி, இளநிலைப்பொறியாளர் சார்லஸ்பிரேம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
The post விளாத்திகுளம் அருகே மந்திக்குளம் பாலம் மழையால் சேதம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரில் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.