- ஸ்ரீவைகுண்டம்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஊர்வசி அமிர்தராஜ்
- ஏரல்
- வைகுந்தத்தின்
- ஊர்வசி அமிர்தராஜ்
- தூத்துக்குடி
- வான்வழி
- குரும்பூர்
ஏரல்: சமீபத்திய வெள்ளத்தால் சேதம் அடைந்த தரைமட்ட பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில், உயர்மட்ட பாலத்தில் விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்து இன்னும் 3 மாதத்தில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் உறுதியளித்தார். தூத்துக்குடியிலிருந்து ஏரல் வழியாக குரும்பூர், குரங்கணி, ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட பாலம் இருந்து வந்தது. ஆற்றில் சிறிதளவு வெள்ளம் வந்தாலே இந்த தரைமட்ட பாலம் மூழ்கி போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால் இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக போக்குவரத்து தடையின்றி வந்தது.
இந்நிலையில் 2023ம் ஆண்டு டிசம்பரில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் ஏரல் உயர்மட்ட பாலத்தை ஒட்டியிருந்த சர்வீஸ் ரோடு அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்தப் பாலம் வழியாக கடந்த ஓராண்டாக போக்குவரத்து நடைபெறவில்லை. பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்த நிலையில், ஏரல் தரைமட்ட பாலம் வழியாகவே கடந்த ஓராண்டாக போக்குவரத்து நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 12, 13,14 ஆகிய தேதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏரல் தரைமட்ட பாலம் மூழ்கியது.
நேற்றுமுன்தினம் வெள்ளம் வற்றி மீண்டும் போக்குவரத்து தொடங்கலாம் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பாலத்தில் பெரிய அளவில் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்திருந்தது. பாலத்தின் கீழே உள்ள குழாய்கள் வெளியே தெரிந்தன. இதையடுத்து இந்த பாலத்தின் வழியாக உடனே போக்குவரத்தை தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையறிந்த வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், ெநடுஞ்சாலை துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக தாம்போதி பாலம் உடைப்பை சீர்செய்து, போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னின்று பாலத்தின் உடைப்பை தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகளை செய்தனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தில் குழாய்களில் தண்ணீர் வருவதை அடைத்தும், பாலத்தின் மேலே வெளியே தெரிகிற குழாய்கள்மேல் லாரிகளில் ஜல்லி கற்கள் கலந்த மணல்களை கொண்டு வந்து கொட்டி, ஜேசிபி மற்றும் ரோடு ரோலர் மூலம் சீரமைத்தனர்.
நேற்று மாலையில் வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், ஏரல் ஆற்றுப்பாலம் உடைப்பு ஏற்பட்ட இடம், சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு போக்குவரத்தை துவக்கி வைத்தார். இதனால் ஏரல் பகுதி மக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஏரல் தாம்போதி பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதை சீரமைத்து, அதில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. உயர்மட்ட பால விரிவாக்க வேலைகள் விரைந்து முடிக்கப்பட்டு இன்னும் 3 மாதங்களில் அதில் போக்குவரத்து தொடங்கப்படும்.’’ என்றார்.
The post வெள்ளத்தால் சேதம் அடைந்த தரைமட்ட பாலம் சீரமைப்பு; உயர்மட்ட பாலத்தில் 3 மாதத்தில் போக்குவரத்து தொடங்கப்படும்: ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் உறுதி appeared first on Dinakaran.